Last Updated : 13 Nov, 2020 07:19 PM

 

Published : 13 Nov 2020 07:19 PM
Last Updated : 13 Nov 2020 07:19 PM

தீபாவளியில் லக்ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

தீபாவளித் திருநாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம். நாளைய நன்னாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த நேரத்தை ஆச்சார்யர்கள் தெரிவித்துள்ளனர்.
இல்லத்தில் சுபிட்சத்தையும் ஐஸ்வர்யத்தையும் தந்தருளும் பண்டிகை தீபாவளித் திருநாள்.

இந்துக்களுக்கான பண்டிகைகளும் வழிபாடுகளும் ஏராளம். என்றாலும் மிக முக்கியமான பண்டிகையாக, உன்னதமான திருநாளாக, எல்லோரும் கொண்டாடப்படுகிற வைபவமாகப் பார்க்கப்படுவது... ‘தீபாவளித் திருநாள்’.

தீபாவளி வைபவத்திருநாளில், காலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து குளிப்பார்கள் மக்கள். குளித்துவிட்டு வந்து, புத்தாடை அணிந்துகொண்டு, இறைவனை வணங்குவார்கள். பின்னர், வீட்டிலுள்ள பெரியோரை வணங்குவார்கள். அதையடுத்து, பட்டாசுகள் வெடித்து, அக்கம்பக்கத்தாருடனும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆக, தீபாவளிப் பண்டிகையின் முதல் விஷயம்... எண்ணெய் தேய்த்து நீராடுவது. அதேபோல் வெந்நீரில் குளிப்பது. தீபாவளி நாளில் குளிப்பதற்கு உகந்த நேரம் என்று அதிகாலை 4.30 முதல் 6 மணியைத் தெரிவித்துள்ளார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த நேரத்தில் நீராட வேண்டும். அதாவது சூர்யோதயத்திற்கு முன்னதாக எண்ணெய் வைத்து குளித்துவிடவேண்டும்.

இதையடுத்து, தீபாவளி பட்சணங்களையெல்லாம் வைத்து பூஜை செய்வதற்கு உரிய நேரம் என்று கணக்கிட்டுத் தெரிவித்துள்ளனர் ஆச்சார்யர்கள்.
அதாவது,

பூஜை செய்ய உகந்த நேரம் -

காலை 7 முதல் 8 மணி வரை. 10.30 முதல் 12 மணி வரை. இதில் 7 முதல் 8 மணி வரை என்பது குரு ஓரை. இந்த நேரத்தில், பூஜித்து வழிபடலாம்.

அதேபோல், தீபாவளித் திருநாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதும், லக்ஷ்மியை வணங்குவதும் குபேரரை ஆராதிப்பதும் இல்லத்தின் தரித்திரங்களையெல்லாம் விரட்டியடிக்கக் கூடியது என்கிறார்கள்.

வியாபாரிகள், லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்துவிட்டு, புதுக்கணக்கு எழுதத் தொடங்குவார்கள். வியாபாரிகள் என்றில்லாமல் எவர் வேண்டுமானாலும் லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். எல்லோருமே வழிபடலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். குபேர காயத்ரியும் மகாலக்ஷ்மி காயத்ரியும் பாராயணம் செய்து வணங்கி பிரார்த்தனை செய்யலாம்.
தீபாவளித் திருநாள் என்பது குபேரனுக்கு அருளிய நன்னாள். எனவே இந்தநாளில், லக்ஷ்மி குபேர பூஜை மேற்கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம்.

நாளை 14ம் தேதி, சனிக்கிழமை அன்று தீபாவளி நன்னாளில் ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையைச் செய்யுங்கள். மனதார பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். இல்லத்தில் தரித்திரம் விலகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். சுபிட்சம் நிலவும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும்.

ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் :

மாலை 5 முதல் 7 மணி வரை.

இது புதன் ஓரை. இந்த நாளில், இந்த நேரத்தில், லக்ஷ்மி குபேர பூஜை செய்யுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x