Last Updated : 13 Nov, 2020 05:59 PM

 

Published : 13 Nov 2020 05:59 PM
Last Updated : 13 Nov 2020 05:59 PM

தீபாவளிக் குளியலுக்கு உகந்த நேரம்! 

தீபாவளிக் குளியலுக்கு உகந்த நேரம் என்று நீராடுவதற்கான நேரத்தைத் தெரிவித்துள்ளார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புண்ணிய நதிகளில் மிக முக்கியமானது கங்கை நதி. ‘கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும்’ என்பது ஐதீகம். கங்கையில் நீராடினால் எந்த ஜென்மத்துப் பாவமோ நீங்கிவிடும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் புராணங்களும் கங்கை நதியையும் கங்கை நதியையும் புனிதத்தையும் விவரித்துள்ளன.

இந்துக்களுக்கான பண்டிகைகளும் வழிபாடுகளும் ஏராளம். என்றாலும் மிக முக்கியமான பண்டிகையாக, உன்னதமான திருநாளாக, எல்லோரும் கொண்டாடப்படுகிற வைபவமாகப் பார்க்கப்படுவது... ‘தீபாவளித் திருநாள்’.

வாரந்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற பழக்கம் இல்லாதவர்கள் கூட, தீபாவளித் திருநாளின் போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்டிகையின் தாத்பர்யமும் இதுதான்.

தீபாவளி வைபவத்திருநாளில், காலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து குளிப்பார்கள் மக்கள். குளித்துவிட்டு வந்து, புத்தாடை அணிந்துகொண்டு, இறைவனை வணங்குவார்கள். பின்னர், வீட்டிலுள்ள பெரியோரை வணங்குவார்கள். அதையடுத்து, பட்டாசுகள் வெடித்து, அக்கம்பக்கத்தாருடனும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆக, தீபாவளிப் பண்டிகையின் முதல் விஷயம்... எண்ணெய் தேய்த்து நீராடுவது. அதேபோல் வெந்நீரில் குளிப்பது. இன்னொரு விஷயம்... மற்றநாட்களில் ‘ஸ்நானம் ஆச்சா?’, ‘குளிச்சாச்சா?’ என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், தீப ஒளித் திருநாளில், ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் கேள்வி... ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்பதுதான். காவிரிக்கரையில் வசிப்பவர்களாகட்டும், பொருநை எனப்படும் தாமிரபரணிக்கரையில் வாழ்பவர்களாகட்டும்... தெற்கேயும் வடக்கேயும் இந்தியா முழுவதும் உள்ள எல்லோரிடமும் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்போம். அதாவது ‘தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியாச்சா?’ என்பதுதான் இது!

தீபாவளிப் பண்டிகை நன்னாளில், கங்காதேவியானவள் எல்லா நீரிலும் வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். பல வீடுகளில் காசியில் இருந்து கங்கா தீர்த்தம் வாங்கி வைத்த சிறிய செம்பு இருக்கும். தீபாவளியின் போது, அதில் உள்ள தண்ணீரை எடுத்து, குளிக்கும் நீரில் கலப்பார்கள். அப்படி கங்கா ஜல செம்பு இல்லாவிட்டாலும் கூட, கங்கா ஜலம் இல்லாவிட்டாலும் கூட, நம் வீடுகளில் உள்ள தண்ணீரில் கங்கா தீர்த்தம் கலந்திருப்பதாக ஐதீகம்.

தீபாவளித் திருநாளில், காலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு, வெந்நீரில் குளித்து, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பதற்கு உரிய நேரம் இதுதான் என்று ஆச்சார்யர்கள் நேரத்தைத் தெரிவித்துள்ளார்கள். 14ம் தேதி சனிக்கிழமை, அதிகாலையில் 4.30 முதல் 6 மணிக்குள், நீராடுவதற்கு உகந்த நேரம் என்று ஆச்சார்யர்கள் தெரிவித்துள்ளனர்.
தீப ஒளி நன்னாளில், உரிய நேரத்தில், நீராடுவோம். ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று பரஸ்பரம் கேட்டுக்கொண்டு, வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x