Published : 13 Nov 2020 04:10 PM
Last Updated : 13 Nov 2020 04:10 PM
திருநள்ளாற்றில் சுவாமிநாத தம்பிரான் சுவாமி நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு, தருமபுர ஆதீனத்தால் நியமிக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டளை விசாரணையாகப் பணியாற்றியவர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்.
இவர் 1956-ம் ஆண்டு திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் கட்டளை விசாரணையாக நியமிக்கப்பட்டார். இவர் காலத்தில் கோயிலுக்குத் தங்கக் காக வாகனம் செய்யப்பட்டது. ஓடாத தேர் ஓடச் செய்யப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல், புதன்கிழமை தோறும் சமய சிந்தனைச் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவர், 1996-ம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆண்டுதோறும் அவரது நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இவரது 24-வது ஆண்டு நினைவையொட்டி இன்று (நவ. 13) திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி, சமாதிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் அபிஷேக ஆராதனைகளை நடத்தினார். இதில், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் உள்ளிட்டோரும், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT