Published : 12 Nov 2020 05:59 PM
Last Updated : 12 Nov 2020 05:59 PM
தீபாவளித் திருநாளில்... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை வழிபாடு செய்யுங்கள். ஐஸ்வர்ய யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திரம் நீங்கும். சுபிட்சம் குடிகொள்ளும்.
தீபாவளித் திருநாள் என்பது மகாலக்ஷ்மிக்கு உரிய நாள். குபேரனுக்கு அருளிய நன்னாள். குபேர பகவானுக்கு நாணயங்களைக் கொண்டு, வழிபாடு செய்வது மிகமிக விசேஷம். குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து. ஆகவே, ஒரு சிறிய தாம்பாளத்தில், ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.
லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி ஜபிக்கலாம். கனக தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் நாணயங்களை அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.
தீபாவளித் திருநாளில்... குபேர பகவானை நினைத்து செய்யப்படும் இந்த வழிபாடு, நிலையான செல்வத்தை அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த செந்நிற அவல் நைவேத்தியம் செய்யவேண்டும். தீப தூப ஆராதனைகள் செலுத்தி, பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
தீபாவளித் திருநாளில்... இல்லத்தில் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும்! பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதியில் வணங்கி, பிரார்த்தனை செய்தால், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கப் பெறலாம். சகல ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறலாம். குபேரயோகம் கிடைத்து இனிதே வாழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT