Last Updated : 29 Oct, 2015 08:03 AM

 

Published : 29 Oct 2015 08:03 AM
Last Updated : 29 Oct 2015 08:03 AM

விவிலிய வழிகாட்டி: கடவுளுக்கு ஓய்வு தேவையில்லை

ஆதிக்க வர்க்கத்தின் சதிக்கு ஆளாகிக் கைது செய்யப்படும் முன்னர், யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா திருவிழா சமயத்தில் எருசலேம் நகருக்கு வந்தார் இயேசு. அங்கே பிரமாண்டமாய் எழுந்து நின்ற யூதர்களின் பேரலாயத்துக்குப் போனார். அந்த ஆலயத்தினுள் சாரிசாரியாய் கடைகள் அமைத்து அதைச் சந்தையைப் போல் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் யூத வியாபாரிகள். கோபம் கொண்ட இயேசு உடனடியாக ஒரு சாட்டையைப் பின்னி வியாபாரிகளை அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”(யோவான் 2: 16) என்று கடிந்துகொண்டார்.

“ஒரு சாமன்ய மனிதன் அதிகாரத்துடன் இப்படிச் செய்ய யார் உரிமை தந்தார்கள்?” என்று கொதித்துப் போனார்கள் ஆளும் யூதர்களான பரிசேயர்களும் சதுசேயர்களும். இவர்கள் வேதநூல்கள், திருச்சட்டங்களைப் பயின்று, தீர்க்கதரிசிகள் விட்டுச்சென்ற முன்னுரைத்தல்களை ஆய்ந்து பொருள் கண்டவர்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதமதத்தின் மேல்மட்டப் பதவிகளில் அதிகாரம் செலுத்திய ஆதிக்க வர்க்கத்தினராக இருந்த இவர்கள், தேவாலயத்திலும் தொழுகை கூடங்களிலும் பிரசங்கம் செய்யும் உரிமையையும் தங்களிடமே வைத்துக்கொண்டார்கள்.

இயேசு இதை உடைத்தெறிந்தார். சாமான்ய மக்கள் கூட்டத்தில் ஒருவராக ஆதிக்க வர்க்கத்தினரால் பார்க்கப்பட்ட இயேசு, சந்தைக்கடையாய் மாறிய தேவாலயத்தைத் தூய்மை செய்தது மட்டுமல்ல; துணிவுடன் தொழுகைக்கூடத்தின் மேடைமீது ஏறி நின்று மக்களுக்குப் போதித்தார்.

போதனையின் ஆன்மா

போதனை என்பது வார்த்தையோடு நின்றுவிடுவதல்ல. அதன் உண்மையான ஆன்மா, வாழ்வைத் தொட வேண்டும். வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத எந்தப் போதனையும், வெறும் சடங்குதான். அவை வெறும் வார்த்தைகள்தான். ஆனால் இயேசுவின் போதனை அவ்வாறு இருக்கவில்லை. வெறும் வார்த்தைகளாகத் தனது போதனை சுருங்கிப்போவதையும் அவர் விரும்பவில்லை. எனவே, அவர் போதித்துக் கொண்டிருக்கிறபோதே, தன்மீது நம்பிக்கை வைத்து தன்னை நாடிவந்த மக்களுக்கு இறைவனாகிய தனது தந்தையின் அருளைப் பெற்று அதன் வழியே அவர்களது நோய் நொடிகளை சுகமாக்கிக் கொண்டிருந்தார். யூதர்கள் புனிதமாகக் கருதிய ஓய்வுநாளில்கூட அவர் போதனைகள் செய்து நோயுற்றவர்களை குணமாக்கிக்கொண்டிருந்தார்.

தொழுகைக்கூடத்தில் போதிப்பது இயேசுவுக்கு இதுவே கடைசிமுறை. இயேசுவைக் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவருடைய எதிரிகள், இயேசுவைச் சுற்றிச் சுற்றி வந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்திய நிகழ்வு நடந்தேறியது. கூன் முதுகு நோயால் 18 ஆண்டுகள் கடும் துன்பத்தில் உழன்ற ஒரு பெண்ணை இயேசு குணப்படுத்திய நிகழ்வை இயேசுவின் சீடர்களில் புனித லூக்கா பதிவு செய்திருக்கிறார்.

ஓய்வு நாளில் துயரம் துடைத்தவர்

லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம்13-ல் 10 முதல்17 வரையான வசனங்களைப் பாருங்கள். “ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ``அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறித் தம் கைகளை அவர்மீது வைத்தார்.

உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம் கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்'' என்றார். ஆண்டவரோ அவரைப் பார்த்து, ``வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.

இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?'' என்று கேட்டார். இயேசுவின் மறுமொழியைக் கேட்ட அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த எளிய மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.”

ஓய்வு தேவையில்லை

பதினெட்டு ஆண்டுகள் என்பது ஏதோ 18 நாட்கள் அல்ல. ஒருவரின் ஆயுள் காலத்தில் அது நான்கில் ஒரு பங்கு. அத்தனை நீண்டகாலமாகக் கூன் விழுந்த மனிதர் பிற மனிதரை முகம் பார்த்துப் பேச முடியாது. அவர்களுடைய கண்கள் எப்பொழுதும் தரையை நோக்கியே இருக்கும். மிகுந்த சிரமத்துடன் பக்கவாட்டில் மட்டுமே பிறரைப் பார்க்க முடியும். ஏற்கெனவே யூத சமுதாயதில் ஒடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் இருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பெண், கூன் முதுகுக்காரியாகவும் இருந்தால் சமுதாயம் அவரை விளிம்புக்குத் தள்ளி ஒதுக்கிவிடும். அவரை யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்க மாட்டார்கள்.

ஆனால் இயேசுவின் கண்கள் அப்பெண்ணைக் கண்டுகொண்டன. ஊனமுற்றிருந்த அப்பெண்ணைப் பார்த்ததும் இயேசு அவரைத் தம் அருகே அழைக்கிறார். அருகில் வந்த பெண்ணை நேருக்கு நேர் பார்க்கும் விதத்தில் அவர் தன் தலையைத் தாழ்த்தி, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்'' என்று கூறியபடி தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அப்பெண் ‘நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்’ (லூக் 13:12-13). கூன் விழுந்திருந்தவர் இப்போது ‘ தலை நிமிர்ந்து’ நிமிர்ந்து நிற்கிறார்.

எளிய மக்கள் மீதான ஆதிக்க சமுதாயத்தின் ஒடுக்குமுறைகள் அவர்ளைக் கூனிக் குறுகி நிற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டாலும் கடவுள் அம்மனிதர்களை நிமிர்ந்து நிற்கச் செய்யும் வல்லமை கொண்டவராக இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வின் மூலம் காண்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x