Published : 22 Oct 2015 12:08 PM
Last Updated : 22 Oct 2015 12:08 PM
ஒரு நாள் மறைஞானசம்பந்தர் தமது சீடனது பக்குவத்தை அறிய விரும்பினார். எனவே, செங்குந்தர் வாழும் தெரு வழியாக வேகமாக நடந்து செல்லத் தொடங்கினார். இவரை விடாமல் பின்தொடர்ந்து வந்த உமாபதி சிவமும் விரைந்து சென்றார். தம்மைப் பின்தொடர்ந்து உமாபதி சிவமும் வேகமாக வருவதை அறிந்தார் ஆசாரியர். இவரைச் சோதிக்க விரும்பினார் மறைஞானசம்பந்தர். மிகவும் பசியால் வருந்துபவர் போல் நடித்தார். தாங்க முடியாத தமது பசியைத் தணித்துக்கொள்ள முயல்பவர்போல அங்கு நெசவாளிகள், பாலில் செலுத்திய கூழினைத் தமக்கு வார்க்குமாறு அங்கிருந்தவரிடம் கேட்டார். முதலில் தயங்கினாலும், இவர் பசியால் வாடுவதை அறிந்து, மேலும் தாமதியாது இவரது கரங்களில் கூழை, அன்போடு வார்த்தனர். பாலில் செலுத்திய கூழை, தமது இரு கரங்களிலும் ஏந்திய மறைஞானசம்பந்தர், `சிவப்பிரசாதம், சிவப்பிரசாதம்` என்று சொல்லிக் கொண்டே, ஆனந்தமாக உண்டார்.
குருவின் பின்னாடியே நடந்து வந்துகொண்டிருந்த உமாபதி சிவம், தமது குருவின் செயலைக் கண்டார். உடனே தாமும் அவர் அருகிலேயே நின்றுவிட்டார். அது மட்டுமா? கூழைக் கையில் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தமது ஆசாரியரின் இரு கைகளிலிருந்தும் முழங்கை வழியாக, ஒழுகிக்கொண்டிருந்த மிச்சத்தை, ஒரு சிறிதும் அருவருப்பு இன்றி, சட்டென்று பிடித்து, கீழே சிந்திவிடாமல் தமது இருகைகளினாலும் ஏந்திக் கொண்டு `குருப்பிரசாதம் குருப்பிரசாதம்` என்று சொல்லிக்கொண்டே மடமடவென்று பருகிவிட்டார்.
வேண்டுமென்றே தமது மாணவனின் தன்மையை இப்படிப் பரிசோதித்த மறைஞானசம்பந்தர், அந்தக் கணத்திலேயே இவருடைய பக்குவ நிலையை உணர்ந்துகொண்டார். தமக்கு உகந்த சீடர் இவரே என்று தீர்மானித்து, சிவஞான தீட்சை அளித்தார்.
சைவ சமய சந்தானக் குரவர்கள்
(வண்ணப்படக் கதை)
ஆசிரியர்: கெளரி ராஜகோபால்
ஓவியம்: ஆர். வெங்கட்
வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம்
விலை: ரூ.120.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT