Published : 06 Nov 2020 11:28 AM
Last Updated : 06 Nov 2020 11:28 AM
பெருமாள் கோயிலில் பிரசாதமாக துளசி தீர்த்தம் தருவார்கள். கருணையே உருவெனக் கொண்டு திகழ்பவர் மகாவிஷ்ணு. ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு விதமான அழகுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தருவார்.
இப்படியான சாந்நித்தியங்கள் கொண்ட இடம் என்பதால்தான் அந்த ஊரில், அந்த இடத்தில்,மன்னர்கள் பிரமாண்டமான கோயிலை எழுப்பி வழிபட்டு வந்தார்கள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டிருப்பதால்தான் அந்தக் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் நம்முடைய வழிபாட்டுக்கு உரிய திருத்தலமாக போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ பெருமாள் கோயில்கள் உள்ளன. இவற்றில் திவ்விய தேசம் என்று போற்றப்படுகிற திருக்கோயில்களும் இருக்கின்றன. 108 திவ்விய தேசங்கள் என்றும் 108 திருப்பதி என்றும் போற்றப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்கள் எனும் பெருமை கொண்ட தலங்களும் இருக்கின்றன.
இந்த 108 திவ்விய தேசங்களைத் தரிசிப்பதே பெரும்பேறு, அதற்காகவே இந்தப் பிறவி என்று 108 திவ்விய தேசங்களை தரிசிக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
நாமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசித்து பெருமாளின் பேரருளைப் பெற்று வருகிறோம். முடியும் போதெல்லாம் 108 திவ்விய தேசக் கோயில்கள் சிலவற்றுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,குணசீலம், திருவெள்ளறை, சமயபுரம், திருப்பட்டூர் என்று ஒரேநாளில் சிவாலயத்தையும் பெருமாள் கோயில்களையும் அம்மன் ஆலயத்தையும் பிரம்மா கோயிலையும் தரிசித்து வருவோரும் உண்டு. இப்படியாக, அந்தந்த ஊருக்குச் சென்று அங்கே உள்ள சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
பெருமாள் கோயிலில், பெருமாளின் சந்நிதியில் தரப்படுகிற துளசி தீர்த்தம் மகத்துவம் வாய்ந்தது. துளசிக்கே மகிமை உண்டு. பெருமாள் பிரசாதமாகத் தரப்படும் துளசி தீர்த்தம் இன்னும் மகத்துவம் வாய்ந்ததாகிறது.
பெருமாள் சந்நிதியில், துளசி தீர்த்தம் தரும் போது, அதைப் பெறுகிற வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தீர்த்தம் பருகுவது, மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சகல தோஷங்களையும் நோய்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள்.
துளசி தீர்த்தம் பெறும் போது...
அகால ம்ருத்யு ஹரணம்
ஸர்வ வியாதி நிவாரணம்
ஸமஸ்த பாப ஸமனம்
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று சொல்லிவிட்டு, துளசி தீர்த்தம் பருகுங்கள். பருகி முடித்ததும் ‘நாராயணா’ என்று மூன்று முறை சொல்லுங்கள். அனைத்து கடாட்சங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT