Published : 05 Nov 2020 03:32 PM
Last Updated : 05 Nov 2020 03:32 PM
‘நீ என் பார்வையில்தான் இருக்கிறாய்; கவலையே படாதே. உனக்கு துன்பம் நேர்வதை ஒருபோதும் நான் பார்த்துக்கொண்டிருக்கமாட்டேன்’ என்று பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.
பகவான் சாயிபாபா, மனிதப் பிறப்பெடுத்து சக மனிதர்களுடன் வாழ்ந்து, மகானாக சுடர் விட்டு ஒளியைப் பரப்பியவர். கலியுகத்தில் இருளை அகற்ற வந்த ஜோதியென வந்தவர் சாயிபாபா என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்.
ஷீர்டி எனும் கிராமத்துக்கு இந்தியாவின் பல ஊர்களில் இருந்தும் பக்தர்களை வரச்செய்த அபூர்வ மகான் என்று போற்றுகிறார்கள். ஷீர்டி கிராமத்தை உலகமே அறியும்படி செய்தருளிய ஒப்பற்ற மகான் என்று சொல்லிச் சொல்லிப் பூரிக்கின்றனர்.
சரணாகதித் தத்துவமே வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை மிக எளிமையாக நமக்கெல்லாம் உணர்த்தியவர். சரணடைதலே பக்தி மார்க்கத்தின் புகலிடம் என்பதை தன்னை நாடி வரும் மக்களுக்கெல்லாம் உணர்த்தியவர். இறைவனைச் சரணடையுங்கள் என்பதை வலியுறுத்திக் கொண்டே வந்தார் சாயிபாபா. ஒருகட்டத்தில், மகான் சாயிபாபாவையே சரணடையத் தொடங்கினார்கள் பக்தர்கள்.
‘என்னை நம்பிக்கையுடன் சரணடையும் பக்தர்களை, ஒருபோதும் நான் கைவிடுவதில்லை’ என்று தன் பக்தர்களிடம் உறுதி அளித்திருக்கிறார் சாயிபாபா.
அதனால்தான் நாள்தோறும் சாயி பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பக்தர்களின் அளவுக்கு இணையாக, இந்தியா முழுவதும் சாயிபாபாவுக்குக் கோயில்கள் எழுப்பிக் கொண்டே வருகிறார்கள்.
சிறிதும் பெரிதுமாக பாபாவுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ‘சாய்’ எனும் திருநாமம் சேர்த்து, பெயர்கள் சூட்டி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பக்தர்கள். அவர்களின் இல்லங்களில், பாபாவின் புகைப்படமோ உள்ளங்கை அளவுச் சிலையோ வைத்து, தினமும் பூஜித்து வருகிறார்கள்.
வடக்கே உள்ள ஷீர்டி எனும் புண்ணிய பூமியில் இருந்து புனித மண்ணெடுத்து வந்து, தெற்கே தமிழகத்தில் எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. வட ஷீர்டி போல் தென்ஷீர்டி என்று போற்றப்படுகிற திருச்சி அக்கரைப்பட்டி சாயிபாபா ஆலயம் வரை... எத்தனையோ ஆலயங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது.
பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தன் ஞானதிருஷ்டியால் அறிந்த சாயிபாபா, ’என் பார்வையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். எதற்கும் கவலையே படாதீர்கள்’ என்று அன்றைக்கே தெரிவித்துள்ளார் சாயிபாபா.
‘நீங்கள் போகிற எல்லா திசைகளிலும் ஒரு வளையம் போல், உங்களைச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறேன். உங்களையே சூழ்ந்துகொண்டிருக்கிறேன். மகனே! நீ என்னுடைய பார்வையில்தான் இருக்கிறாய். என்னுடைய பிடியில்தான் இருக்கிறாய்.
நான் உன்னுடைய பாதுகாவலன். அதனால்தான் நீ போகிற திசைகளிலெல்லாம் நானும் வந்துகொண்டே இருக்கிறேன். நான் உன்னுடைய தகப்பன். அதனால்தான் என்னுடைய பார்வையில் படும்படியாகவே உன்னை வைத்துக்கொண்டிருக்கிறேன்.
உனக்கு துன்பம் நேருவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். உன்னை உன்னுடைய எல்லாக் கவலைகளில் இருந்தும் உன்னை விடுவித்துவிடுவேன். கலங்காதே’ என பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.
பாபாவின் பக்தர்கள் எந்தத் திசையில் இருந்தாலும் அந்தத் திசையில் இருந்து கொண்டு, தன் பக்தர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாபா. அவரின் பார்வையில் இருந்துகொண்டிருக்கிறார்கள் சாயி பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT