Published : 15 Oct 2015 10:53 AM
Last Updated : 15 Oct 2015 10:53 AM
திருமாலின் திருக்கோலங்களில் சயனக் கோலமும் ஒன்று. அதிலும் புஜங்க சயனம், வீர சயனம், போக சயனம், உத்தான சயனம், பால சயனம், தல சயனம் எனப் பல வகை உண்டு. திருவிந்தளூர் தலத்திலுள்ள பரிமள ரங்கன் நான்கு திருக்கரங்களோடு சங்கு, சக்கரதாரியாக வீர சயனத்தில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரங்கனின் திருமுகத்தருகே சூரியனும், பாதங்களுக்கு அருகில் சந்திரனும், நாபிக் கமலத்தில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர். தலைப் பக்கத்தில் காவிரித் தாயும், கால் பக்கத்தில் கங்கா மாதாவும் பெருமாளை தரிசித்தவாறு காட்சியளிக்கின்றனர். மேலும் எமதர்மராஜனும், அம்பரீஷ் மகாராஜாவும் திருவடிகளுக்கு அருகில் பெருமாளை வணங்கிய வண்ணம் உள்ளனர்.
அழகிய திருக்கோலம்
பரிமள ரங்கனாதன் என்ற பெயருக்கேற்றாற்போல் உற்சவ மூர்த்தி அழகிய திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அருகில் சந்தான கோபாலமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார்.
பிரம்மதேவன், திருமால் உபதேசித்த நான்கு வேதங்களையும் கொண்டு உலகைப் படைக்கத் தொடங்கினார். ஆனால் மது, கைடபன் என்ற அசுரர்கள் பிரம்மனிடத்தில் இருந்து வேதங்களைப் பிடுங்கி நீரில் ஒளித்து வைத்தனர். பிரம்மன் திருமாலைச் சரணடைந்து விவரங்களைக் கூற, திருமாலும் மீன் வடிவம் கொண்டு வேதங்களை மீட்டார். அசுரர்களிடம் சிக்கியதாலும், நீர்நிலையில் இருந்தபடியாலும் வேதங்களின் மீது வீசிய துர்நாற்றங்களை அகற்றி, சுகந்த மணம் வீசுமாறு செய்து பிரம்மாவிடம் கொடுத்ததால் இப்பெருமான் பரிமளரங்கன் என்ற திருநாமத்தைக் கொண்டான்.
இத்தலம் காவிரியாற்றின் கரையிலமைந்து சோலைகள் சூழ நந்தவனமாக விளங்கியதால் சுகந்த வனம் என்று அழைக்கப்படுகிறது. பெருமானுக்கு சுகந்தவனநாதன் என்பது திருநாமம். தாயார் திருநாமம் சுகந்தவன நாயகி.
களங்கம் தீர்க்கும் கங்கை, காவிரி
மக்கள் தங்களது பாவங்களை கங்கையில் நீராடிப் போக்கிக்கொண்டதால் அதன் புனிதத்தன்மை மாசடைந்தது. அதனால் வருந்திய கங்கை திருமாலிடம் தன் களங்கம் தீர அருள்புரிய வேண்டினாள். அதற்கு திருமால் பரிமள ரங்கனை காவிரியில் துலா மாதத்தில் தீர்த்தவாரி கண்டு அருளுவதால், அந்தச் சமயம் கங்கையும் காவிரியில் கலந்திட்டால் களங்கம் தீரும் என்று அருளினாராம்.
அதன்படி துலா மாதத்தில் அதாவது ஐப்பசி மாதத்தில், கங்கையும், காவிரியும் இணைந்திருக்கும் நேரம் துலா ஸ்நானம் செய்தால் பாவம் தொலையும் என்பது ஐதிகம். ஐப்பசி மாதம் முழுவதும் குறிப்பாகக் கடைசி பத்து நாட்கள் பரிமளரங்கன் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார்.
சந்திரன் தன் கொடிய நோயிலிருந்து மீள இத்தலத்திற்கு வந்து துலா ஸ்நானம் செய்து, இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றமையால், இத்திருக்குளத்திற்குச் சந்திரனின் ஒரு நாமமான இந்து புஷ்கரணி என்ற பெயர் ஏற்பட்டது. சந்திரனின் சாபம் போக்கியதால் இப்பெருமாளுக்கு சந்திர சாப விமோசனப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. சந்திர கிரக தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற இப்பெருமாளை தரிசித்துப் பயன் பெறலாம் என்பது நம்பிக்கை.
அம்பரீஷ மகாராஜா மீது துர்வாச முனி ஏவிய பூதத்திடமிருந்து இப்பெருமாள் காத்து, வீரசயனக் காட்சி கொடுத்தருளினார். அதனால் அம்பரீஷ் மகாராஜா இப்பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடத்தினார். அத்தகைய விழா ஆண்டுதோறும் இன்றும் நடந்துவருகிறது.
பரிமள ரங்கனாதனின் நாயகியாய் இத்தலத்தில் காட்சி தரும் பரிமள ரங்கனாயகி அருளாட்சி புரிகிறாள். ராமன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் உண்டு.
ஐப்பசி மாதத்தில் காவிரிக் கரையோரம் அமைந்துள்ள திருத்தலங்களில் அமைந்திருக்கும் திருக்குளம், நீர் நிலைகளில் புனித நீராடி பகவானை தரிசித்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT