Published : 28 Oct 2020 07:29 PM
Last Updated : 28 Oct 2020 07:29 PM
பகவான் சாயிபாபாவை, குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமைகளில் வணங்குவோம். ‘சாயிராம்’ என்றும் ‘சாய் மகராஜுக்கு ஜே’ என்றும் சொல்லி வணங்கி வழிபடுவோம். நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் பாபா.
பகவான் சாயிபாபா கண்கண்ட தெய்வம். கலியுகத்தில் கண் முன்னே நடமாடிய ஒப்பற்ற மகான். இன்றைக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஷீர்டி எனும் புண்ணியத்தலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஷீர்டியை தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஷீர்டி திருத்தலம் எனும் புண்ணிய பூமியில், பகவான் சாயிபாபா தவமிருந்த இடம், தூங்கிய அறை, திருச்சமாதியான இடம் என அனைத்தும் அடங்கிய, மிகப்பெரிய, முக்கியமானதொரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது ஷீர்டி!
இங்கே சிலிர்க்கத் தக்க விஷயம்... சமாதி மந்திர் பகுதியில் உள்ள சாயிபாபா திருச்சிலை. அப்படியே தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம் அந்தப் பகுதியில் எங்கே இருந்தாலும் சாயிபாபா நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அமைக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். அதிசயம்தான். இதை அங்கே சென்ற அனைவருமே உணர்ந்து சிலிர்த்திருப்பார்கள். இந்தச் சிலிர்ப்புப் பரவத்தை அனுபவிப்பதற்காகவே, ஷீர்டிக்குச் சென்று தரிசித்தபடி உள்ளனர்.
இந்தியாவில் பல ஊர்களில் சாயிபாபாவுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் சாயிபாபா கோயில், ஓ.எம்.ஆரில் உள்ள கோயில், தி.நகரில் உள்ள கோயில், திருச்சி சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி சாயிபாபா கோயில் உள்ளிட்ட பல கோயில்களில், சாயிபாபா நம்மைப் பார்த்தபடி, நம்மை கவனித்தபடி அருளிக்கொண்டிருக்கிறார்.
இந்த ஆலயங்களுக்கெல்லாம் எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள் பக்தர்கள். வியாழக்கிழமை என்றில்லாமல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பாபாவை தரிசித்துச் செல்கிறார்கள்.
ஷீர்டியில்... மந்திரில் மூன்றாம் நம்பர் நுழைவாயில் உள்ளது. இந்த வழியே சென்றால், குருஸ்தானுக்கு முன்னதாக சமாதி மந்திர் ஜன்னல் வழியே சாயிபாபாவை, அந்தத் திருமேனியை அருமையாகத் தரிசனம் செய்யலாம். இந்த இடத்தில் இருந்து தரிசிப்பது, உண்மையிலேயே மெய்சிலிர்க்கச் செய்கிறது என்று பூரிக்கிறார்கள் பக்தர்கள்!
இதேபோல்தான், தமிழகத்தின் பல பாபா கோயில்களிலும் அப்படியொரு சிலிர்ப்பான தரிசனத்தைக் கண்டோம் என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் ஷீர்டியில் கூட்டம் அலைமோதும். தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டமென இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வந்தவண்ணம் இருக்கிறார்கள். வந்து சாயிபாபாவைத் தரிசித்தபடி இருக்கிறார்கள்.
இந்த நிலை, தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கிற பாபா கோயிலிலும் தொடர்கிறது.
‘சாயிராம்’ என்று சொன்னாலோ, ‘சாயி மகராஜுக்கு ஜே’ என்று சொல்லி வணங்கி வழிபட்டாலோ... நம் குரலுக்கு ஓடோடி வந்து நமக்கு அருளுவார் சாயிபாபா என்கிறார்கள் பக்தர்கள்.
வியாழக்கிழமையை குரு வாரம் என்று சொல்லுவார்கள். ஞானகுருவாகத் திகழும் பகவான் ஷீர்டி சாயிபாபாவை, மனமொருமித்து, ‘சாயி மகராஜுக்கு ஜே’ என்று மூன்று முறை அழைத்து, உங்கள் கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பியுங்கள்.
நம் குரலுக்கு பாபா செவி சாய்ப்பார். நம் சிக்கல்களையும் கவலைகளையும் தீர்த்துவைப்பார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT