Published : 29 May 2014 10:22 AM
Last Updated : 29 May 2014 10:22 AM
தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடிதிட்டையில் குருப்பெயர்ச்சி விழா சிறப்புடன் நடைபெற இருகிறது. ஊழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காமல் தப்பித்த அதிசயத்தலம் இந்தத் தென்குடிதிட்டை. இங்குள்ள வசிஸ்டேஸ்வர் ஆலயத்தில் தனிச் சன்னதியில் அமைந்துள்ளார் குருபகவான். இவர் ஒருவரே உலகம் முழுவதும் உள்ள தனம், தானியம், செல்வம் என்ற அனைத்திற்கும் அதிபதி. இவர் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களைத் தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களைத் தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குரு. எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட குருப்பகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவருக்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி இலட்ச்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி விழா கூடுதல் சிறப்போடு நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கான பரிகார பூஜைகள், யாகங்கள் அனைத்தும் விரிவான முறையில் நடைபெற இருக்கிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப வழிபாட்டு வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன. அன்றைய தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெறும்.
திட்டை திருத்தலத்தில் மூலவர் வசிஷ்டேஸ்வரரின் விமானத்தில் சந்திரகாந்தக் கல், சூரிய காந்தக் கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து அழியும் சாபம் பெற்ற சந்திர பகவான், திங்களூர் வந்து கைலாசநாதரை வணங்கித் தவம் இருந்தார். கைலாசநாதரும், சந்திரனின் சாபம் நீங்கி மூன்றாம் பிறையாகத் தன் சிரசில் சந்திரனை அணிந்துகொண்டார். திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்குத் திட்டையிலே சந்திரன் நன்றிக்கடனைச் செலுத்துகிறார். இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.
இவ்வாலயத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக் கட்டங்கள் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும் போது அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை என போற்றப் படுகிறாள்.
ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சி தவிர மேலும் இரண்டு முக்கியமான பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. 21-ம் தேதி இராகு பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷத்திலிருந்து மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். மூன்று முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியை முன்னிட்டு, 19-ம் தேதியன்று குருப்பகவானுக்கு ஏகதின இலட்சார்ச்சனையும், அதனைத் தொடர்ந்து 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நான்கு தினங்கள், நவக்கிரங்களுக்கு உரிய பலன் தரும் பரிகார ஹோமங்கள் வேத விற்பன்னர்களைக் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற உள்ளன.
நேரில் வர முடியாத பக்தர்களுக்கு:
இலட்சார்ச்சனைக்கு 300 ரூபாயும், பரிகார ஹோமத்திற்கு 500 ரூபாயும் வரைவோலை அல்லது மணி ஆர்டர் எடுத்து நிர்வாக அதிகாரி, (executive officer) அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - 613 003 என்ற முகவரிக்கு தங்கள் நட்சத்திரம், இராசி லக்னம் ஆகிய முழு விபரங்களுடன் சரியான முகவரியையும் அனுப்பினால் அவர்களுக்கு ஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரசாதம் தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர், குருபகவான் படம், ஹோமம் அஞ்சனம் (மை), தோஷம் நீக்கும் மஞ்சள் கயிறு ஆகியவையும் அனுப்பி வைக்கப்படும் என்று ஆலய நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு தெரிவிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT