Published : 29 Oct 2015 08:36 AM
Last Updated : 29 Oct 2015 08:36 AM
ஆருத்ரா தரிசனத்திற்குப் புகழ்பெற்ற மரகத நடராஜர் வீற்றிருக்கும் திருத்தலம் உத்திரகோசமங்கை. உமையவள் மட்டுமே காணுமாறு இறைவன் நடனமாடிய இடம் இதுமட்டுமே. இங்குள்ள தலவிருட்சமான இலந்தைமரம், மூவாயிரம் ஆண்டுகள் கடந்தது என்று சொல்லப்படுகிறது.
சுவாமியின் திருநாமம் மங்களநாதர். தேவியின் திருநாமம், மங்களாம்பிகை. இத்திருக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது.
இக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ளது. இலங்கைவேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரிக்குக் காட்சி தருவதற்காக சிவன் இலங்கை சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. சுவாமி சன்னதியின் சுவற்றில் மண்டோதரி பெயர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
தேவிக்கு வேத ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என்று வழங்கலாயிற்று. இக்கோயிலின் சிறப்பாக, ஆருத்ரா தரிசன தினத்தின்போது மட்டும் அபிஷேகம் நடத்தப்படும் ஆறடி உயர மரகத நடராஜர் திருமேனிக்கு பிற நாட்களில் சந்தனக் காப்பு சாற்றி வைக்கப்பட்டிருக்கும்.
சிறிய மரகத லிங்கத்திற்கு தினமும் நண்பகல் பொழுதில் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆதியில் உருவான கோயிலாகச் சிறிய கோயில் ஒன்றும் அந்த வளாகத்தினுள் உள்ளது. இதில் சகஸ்ர (ஆயிரம்) லிங்கங்கள் ஒன்றாகக் காட்சி தரும் சிவலிங்கம் அருள்பாலிக்கிறது. இந்த சகஸ்ரலிங்க சந்நிதியில் தான் பழம்பெரும் தலவிருட்சமாக இலந்தை மரம் உயிர்ப்புடன் கனிகளையும் நிழலையும் தந்து நின்றுகொண்டிருக்கிறது.
அதன் குளிர் நிழலில் இளைப்பாறி, அந்த மரத்தில் இருந்து உதிரும் பழங்களை, ஊதி, ஊதி, கோயிலின் பிரசாதமாக அருந்தலாம். அருகில் உள்ள அக்னி தீர்த்தத்திலிருந்து குளிர் தென்றல் வீசுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT