Published : 27 Oct 2020 08:19 PM
Last Updated : 27 Oct 2020 08:19 PM
ஐப்பசி துவாதசி காலையிலும் திரயோதசி மாலையிலும் வருகிறது. போதாக்குறைக்கு புதன்கிழமையன்று வரும் பிரதோஷம் வருகிறது. காலையில் மகாவிஷ்ணுவையும் மாலையில் சிவபெருமானையும் வழிபடுங்கள்.
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடுவது புண்ணியத்தைத் தரும்.
ஐப்பசியை துலா மாதம் என்பார்கள். காவிரியில் துலா ஸ்தானக் கட்டம் என்றே உள்ளது. மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் துலா ஸ்தானக் கட்டம் என்றே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில், காவிரியில் நீராடி, துவாதசியில் பெருமாளை தரிசிப்பது மகா புண்ணியம். தனம் தானியத்தைப் பெருக்கித் தரும் என்பது ஐதீகம்.
அதேபோல், பெருமாளுக்கு உகந்த துவாதசியில், பெருமாளுக்கு உகந்த புதன் கிழமையில், காலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். பெருமாளின் அருளையும் மகாலக்ஷ்மித் தாயாரின் அருளையும் பெறலாம்.
நாளைய தினம் 28ம் தேதி புதன்கிழமை துவாதசி (மதியம் வரை உள்ளது). எனவே காலையில் பெருமாளை வழிபடுங்கள். பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள்.
அதேபோல், ஐப்பசி திரயோதசியும் சிறப்பு வாய்ந்தது. ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷம். இல்லத்தில் சுபிட்சத்தைத் தரும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளைய தினம் 28ம் தேதி புதன்கிழமை, பிரதோஷம். திரயோதசி திதி மதியத்துக்குப் பிறகு ஆரம்பமாகிவிடுகிறது. எனவே மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரையிலான காலம், பிரதோஷமும் நாளைய தினம் வந்துவிடுகிறது.
ஆகவே நாளைய பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில், மாலையில், சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். சிவ கடாக்ஷத்தைப் பெறுவீர்கள். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
நாளைய தினம் காலையில் பெருமாளையும் மாலையில் சிவனாரையும் வழிபடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT