Last Updated : 26 Oct, 2020 06:58 PM

 

Published : 26 Oct 2020 06:58 PM
Last Updated : 26 Oct 2020 06:58 PM

வாஸ்து நாளில்... வாஸ்து பகவானை வேண்டுவோம்; வீட்டுக்கு திருஷ்டி கழிப்போம்! 

வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வேண்டுவோம். வீட்டில் எல்லா இடங்களுக்கும் தீப தூப ஆராதனைகள் செய்வோம். வீட்டு நிலைவாசலில் இருந்தபடி திருஷ்டி சுற்றிப் போடுவோம்.

குடியிருக்கும் இல்லம் என்பது, வாஸ்து அமைப்பின்படி கட்டமைத்திருப்பது அவசியம் என்கிறது மனையடி சாஸ்திரம். நாம் குடியிருப்பது, வாடகை வீடாக இருந்தாலும் சரி... சொந்த வீடாக இருந்தாலும் சரி... வாஸ்து விஷயங்கள், அமைப்புடன் இருக்கவேண்டும்.

வாஸ்துப்படி, ஒவ்வொரு விஷயங்களும் உரிய வகையில் இருக்கவேண்டும் என்று ஜோதிட வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள். அப்படி சரியாக அமையாது போனாலும் கூட, நம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் படுத்தியெடுக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

சொந்த வீட்டில் குடிபோவார்கள். ஆனால், போனதிலிருந்தே உடலில் திடீர் திடீர் என நோய்கள் ஏதாவது வந்து படுத்தும். மருத்துவமனை, மருந்து, சிகிச்சை என மேற்கொள்ளவேண்டியதிருக்கும். ‘என்னவோ தெரியலீங்க. அந்த வீட்லேருந்து இந்த வீட்டுக்கு குடிமாறி வந்ததுலேருந்து படுத்தியெடுக்குது. எவ்ளோ சம்பாதிச்சாலும் காசே தங்கமாட்டேங்கிது’ என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். நாமே கூட சொல்லியிருப்போம்.

சிலர், ஏரியாவில் தண்ணீர்ப் பிரச்சினை முதலான விஷயங்கள் இருந்தாலும் வாடகை வீட்டை காலி செய்யவே மாட்டார்கள். இன்னும் சிலர், சொந்த வீடு கட்டி அதை வாடகைக்கு விட்டிருப்பார்கள். இருக்கும் வாடகை வீட்டிலேயே இருந்துகொண்டிருப்பார்கள். கேட்டால், ’இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்துதான் நாலு காசு சேக்கமுடிஞ்சுது. அடகில் இருந்த நகையையெல்லாம் மீட்க முடிஞ்சுது. எங்க வீட்டுக்காரருக்கு அதுவரை சரியான வேலை இல்ல. இங்கே வந்ததும்தான், நல்ல வேலை கிடைச்சிச்சு. இடம் வாங்க முடிஞ்சிச்சு. வீடு கட்ட முடிஞ்சிச்சு. அதனால, இந்த வீடு ராசியான வீடு எங்களுக்கு. காலி பண்ண மனசே வரலை’ என்று சொல்லுவார்கள்.

வீடு என்பது வெறும் கட்டடமாகவே நாம் பார்ப்பதில்லை. உயிருள்ள விஷயமாக, நம் மனதுடன் இரண்டறக்கலந்துவிட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சொந்த வீடோ, வாடகை வீடோ... எதுவாக இருந்தாலும் அங்கே வீடானது வாஸ்துப்படி இருக்கவேண்டும். வாஸ்துப்படி இருக்கிற ஜன்னலும் கதவும் ஷெல்ஃப்புகளும் ஸ்விட்ச் போர்டும் கூட, நம்முடைய குணாதிசயங்களை, கேரக்டர்களை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை அசைத்துப்பார்க்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், வீட்டை சுத்தமாக்கிவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி வைக்கவேண்டும். வீட்டில் உள்ள அஷ்டதிக்குகளுக்கும் எல்லா மூலைகளிலும் தீப தூப ஆராதனைகள் காட்டி, பீரோ முதலான துணிமணிகள் வைக்கும் இடம், பணம் வைக்கும் இடம், அரிசி, பருப்பு முதலான தானியங்கள் வைக்கும் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தீப தூபம் காட்ட வேண்டும்.

வீட்டு நிலைவாசலில் நின்று கொண்டு, தேங்காய் அல்லது எலுமிச்சை அல்லது பூசணிக்காய் கொண்டு திருஷ்டி சுற்றி, முச்சந்தியில் உடைத்துவிட்டு, வீட்டுப் பூஜையறையில் சூடமேற்றி நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் அல்லது ஏதேனும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யவேண்டும். அக்கம்பக்கத்தாருக்கு வழங்கவேண்டும்.
வாஸ்துபகவானின் அருளையும் இறையருளையும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 27.10.2020 செவ்வாய்க்கிழமை வாஸ்து நாள். காலை 7.44 முதல் 8.20 மணி வரை வாஸ்து நேரம். இந்த நாளில், இந்த நேரத்தில் பூஜை செய்யுங்கள். தோஷமெல்லாம் விலகும். திருஷ்டியெல்லாம் கழியும். தடைகள் அனைத்தும் நீங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x