Published : 23 Oct 2020 11:39 AM
Last Updated : 23 Oct 2020 11:39 AM
ஐப்பசி வெள்ளிக்கிழமையில்... அஷ்டமியும் இணைந்தநாளில் பைரவரை வணங்குவோம். பயமின்றி வாழ்வோம். தடைகள் அனைத்தையும் தகர்த்து அருளுவார் பைரவர்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கலியுகத்தில் நமக்குக் கண் கண்ட தெய்வமாகத் திகழ்பவர் கால பைரவர். சக்திவாய்ந்த தெய்வமாக, நம் சங்கடங்களைத் தகர்க்கும் கடவுளாக, காட்சி தந்து அருளுகிறார் பைரவர்.
பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் பாராயணம் செய்து வழிபடுவதும் மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.
பைரவர் என்பவர், பாதுகாவலராகவே புராணத்திலும் ஸ்தல புராணங்களிலும் பார்க்கப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும். எல்லாச் சிவாலயங்களையும் காவல் காக்கிற தெய்வமாக பைரவர் கொலுவிருக்கிறார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷம். அஷ்டமி தினத்தில் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இன்னல்கள் மொத்தமும் காணாமல் போகும் என்பது ஐதீகம்.
அதேபோல், பைரவருக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் மகத்தான பலன்களைத் தரும். பைரவருக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, மனதார வேண்டிக்கொண்டு, தெருநாய்களுக்கு அவற்றை வழங்கினால், நம்மைப் பிடித்துள்ள பீடையும் தரித்திரமும் விலகிவிடும். தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். தீய சக்திகள் நம்மை அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பைரவருக்கு வடைமாலை சார்த்துவதும் விசேஷமானது. துக்கங்களையும் காரியத்தடைகளையும் போக்கியருள்வார் பைரவர்.
அஷ்டமியில் பைரவ மூர்த்தங்களில் முக்கியமான மூர்த்தமான சொர்ணாகர்ஷண பைரவரை மனதாரப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். இல்லத்தில் தனம் - தானியம் பெருகும்.
இன்று அஷ்டமி. இந்த நன்னாளில், ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையில், பைரவரைத் தரிசித்து வேண்டிக்கொள்ளுங்கள். பைரவாஷ்டகம் பாராயணம் செய்யுங்கள். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். உணவிடுங்கள். உன்னதமான வாழ்க்கையை வாழச் செய்வார் பைரவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT