Last Updated : 29 Oct, 2015 08:29 AM

 

Published : 29 Oct 2015 08:29 AM
Last Updated : 29 Oct 2015 08:29 AM

புத்தரின் சுவடுகளில்: நீரில் இல்லை

புத்தரும் அவரது சீடர்களும் கயா அருகில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகே சில துறவிகள் கடுமையான யோக முறைகளில் ஈடுபட்டிருந்தனர்.



அது குளிர்காலம் பனி அனைவரையும் உலுக்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அத்துறவிகள் சில்லிடும் ஆற்றில் இறங்கி சிரமத்துடன் முங்கிக் குளித்தனர். அதன் மூலம் ஆன்மிகத் தூய்மையை அடைந்துவிடுவோமென்று நம்பினார்கள்.

ஒரு நாள் காலை புத்தர் தனது சீடர்களுடன் அதே ஆற்றின் கரைக்குப் போய் நின்றார். அங்கே குளிரில் பற்கள் கிட்டிக்கத் துறவிகள் குழுவினர் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். புத்தரோ தனது சீடர்களைப் பார்த்து, “ தூய குளிர்ந்த நீர் ஒருபோதும் ஆன்மாவைத் தூய்மையாக்காது. சத்தியத்தால் மட்டுமே ஆன்மாவைத் தூய்மையாக்க இயலும். கடும் விரதமுறைகளால் ஒரு நபர் புனிதமாவதில்லை.” என்றார்.

மலையும் நகரமும்

துறவி லிஞ்சி தனது சீடர்களிடம் உரையாற்றினார். “ஒரு மலையின் உச்சியில் தனியாக ஒருவன் அமர்ந்திருக்கிறான். ஆனாலும் அவன் உலகத்தின் மீதான பந்தத்தை விடவேயில்லை. இன்னொருவனோ நகரத் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் அவனோ ஆசைகள் மற்றும் பந்தங்களிலிருந்து விடுபட்டவன். இவர்களில் யார் ஆன்மிக ரீதியாக வளர்ந்தவர்? நான் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதாக எண்ண வேண்டாம். உங்களிடம் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.”

லிஞ்சி தொடர்ந்தார். “ஒரு நபர் சாலையில் இருக்கிறான். ஆனால் அவன் ஆன்மிக ரீதியாக வீட்டை விட்டு வெளிவரவேயில்லை. இன்னொருவனோ வீட்டிலேயே இருக்கிறான். ஆனால் ஆன்மிக ரீதியாக வீட்டிலிருந்து முன்னரே கிளம்பிவிட்டவன். இவர்களில் யார் அதிக மரியாதைக்குரியவர்?”. லிஞ்சி கிளம்பிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x