Last Updated : 22 Oct, 2020 03:07 PM

 

Published : 22 Oct 2020 03:07 PM
Last Updated : 22 Oct 2020 03:07 PM

மாங்கல்ய மகரிஷியை தரிசித்தால் மாங்கல்ய வரம்!  கல்யாண வரம் தரும் இடையாற்றுமங்கலம் மாங்கலீஸ்வரர்! 

திருச்சிக்கு அருகே உள்ளது லால்குடி. இந்த ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இடையாற்று மங்கலம் எனும் சின்னஞ்சிறிய கிராமம் .இந்த கிராமத்தில்தான் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் சிவனார்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் ஸ்ரீமாங்கலீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மங்கலாம்பிகை. மாங்கல்ய வரம் தரும் ஆலயம் இது. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. அதனால்தான் சுவாமிக்கு மாங்கலீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு மங்கலாம்பிகை என்றும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். மாங்கல்யேஸ்வரர் என்பதுதான் மாங்கலீஸ்வரர் என மருவியதாகச் சொல்கிறார்கள்.

இன்னொன்றும் சொல்லுவார்கள்.

மாங்கல்ய மகரிஷி என்பவர், இங்கே சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். தினமும் காலையும் மாலையும் சிவபூஜைகள் செய்து வழிபட்டார். அவருக்கு சிவபெருமான் திருக்காட்சி தந்தருளினார். மேலும் மகரிஷி வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அருளுகிறார் சிவனார்.

சம்பிரதாய முறையில், கல்யாணப் பத்திரிகை அடிப்போம். அந்தப் பத்திரிகையில், கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் இரண்டு பக்கமும் அச்ச்சிட்டிருப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா? அந்த தேவதைகளை திருமண வைபவத்துக்கு அனுப்புபவர் மாங்கல்ய மகரிஷி என்றும் திருமணமாகும் தம்பதிக்கு ஆசியும் அருளும் வழங்குகிறார் என்றும் ஐதீகமாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்தில் மாங்கல்ய மகரிஷிக்கு சந்நிதி இருக்கிறது. அவருடைய நட்சத்திரம் உத்திரம். பொதுவாகவே, உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனால்தான் பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடந்திருக்கின்றன என்கிறது புராணம். மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரக்காரர் என்பதால், இந்தத் தலம் கல்யாண வரம் தரும் திருத்தலமாகப் போறப்படுகிறது.

மாங்கலீஸ்வரர் கோயிலில், எந்த நாளில் வந்து வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம். என்றாலும் உத்திர நட்சத்திர நாளில் வந்து, மாங்கல்ய மகரிஷியையும் மாங்கலீஸ்வரரையும் மங்கலாம்பிகையும் தரிசித்து வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருக்கோயில் இது. உத்திரநட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து வணங்கினால், முன் ஜென்ம தோஷம் உள்ளிட்டவை கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

இங்கே, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் என மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தந்து அருளுகின்றனர்.

தவம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் மாங்கல்ய மகரிஷியை நெய் விளக்கேற்றி வழிபட்டு, சிவனாரையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும். மகரிஷியின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொள்வதும் இங்கே வழக்கமாக இருக்கிறது.

திருமணம் நடந்தேறியதும் இங்கு வந்து சிவனாருக்கும் அம்பாளுக்கும் மாங்கல்ய மகரிஷிக்கும் மாலைகள் சார்த்தி, இனிப்பு வகைகள், தேங்காய் முதலானவற்றை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

இங்கு வந்து தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். மாங்கல்ய பலம் பெருகும்.

கன்னியரின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் மாங்கல்ய மகரிஷி. மாங்கலீஸ்வரர், மங்கலாம்பிகை, மாங்கல்ய மகரிஷி மூவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, புடவை அல்லது ஜாக்கெட் பிட், குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்கி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, கல்யாணம் விரைவில் நடைபெறும். சீக்கிரமே கெட்டிமேளம் இல்லத்தில் முழங்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

இடையாற்று மங்கலம் மாங்கலீஸ்வரரையும் மங்கலாம்பிகையும் மாங்கல்ய மகரிஷியையும் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். பிரிந்த தம்பதி சீக்கிரமே ஒன்றுசேரப்போகிறீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x