Published : 21 Oct 2020 09:07 PM
Last Updated : 21 Oct 2020 09:07 PM

காக்க காக்க கனகவேல் காக்க!  - கந்தனை வணங்கினால் கவலைகள் தீர்ப்பான்! 

‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தனை வேண்டுவோம். நம் கவலைகளையெல்லாம் தீர்த்தருள்வான் ஞானக்குமரன். கல்யாண வரம் தந்திடுவான் முத்துக்குமரன்.
கோயில்களைப் பார்ப்பதே கொள்ளை ஆனந்தம். கோயில்களில் தெய்வங்களையும் சிற்பங்களையும் பார்க்கப் பார்க்க, பரவசமும் அமைதியும் தரும். முக்கியமாக, கோயில்களில் பக்தர்கள் கூட்டம் பார்க்கும் போதெல்லாம், நம்மையும் அறியாமல், அந்தக் கூட்டக் குதூகலிப்பிற்குள் ஐக்கியமாகிவிடுவோம்.

கடவுளை வழிபட வேதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மந்திரங்கள் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமில்லை. ஜபங்களில் மூழ்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது. இறைவனை வாயாரக் கூப்பிட்டு, கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் போதும். கூப்பிட்ட நம் குரலுக்கு ஓடோடி வருவார்கள் தெய்வங்கள்.

எளிய மனிதர்களுக்கான வழிபாட்டு முறையே... இறைவனை கூப்பிட்டு வழிபடுவதுதான். அப்படி எளிய மனிதர்களுக்கான கூப்பிடு பொருளாக, பொருள் நிறைந்திருப்பவனாக, பொருள் கொடுப்பவனாக அருள்கிறான் கந்தக் கடவுள். இதனால்தான் எளிய மனிதர்கள், ‘எங்க சாமி... முருகப்பன்’ என்று கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில்... அப்பா சிவபெருமானுக்கும் தாய்மாமன் மகாவிஷ்ணுவுக்கும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அம்மா உமையவளுக்கும் ஆலயங்கள் நிறையவே உண்டு. ஆனாலும் அப்பாவை விட, மாமாவை விட, அம்மாவை விட பிள்ளைக்குக் கொஞ்சம் மவுசு ஜாஸ்திதான். ஏனென்றால், எளிய மனிதர்களின் கடவுளாக, தமிழ்க்கடவுளாக போற்றப்படுகிறான் முருகப்பெருமான்!

முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். ஆமாம்... முருகன் பேரழகன். அவன் வாகனமான மயிலைவிட, கொள்ளை அழகு கொண்டவன். பாலகன். குமரன். பாலகுமாரன். சிறுவயதுக் கடவுள். வைஷ்ணவத்தில் குறும்புக் கண்ணனென்றால், இங்கே கோபக்கார பாலகன். அந்தக் கோபத்தில்தான் பாலனாக, பாலதண்டாயுதபாணியாக, ஓர் தலத்தில் நின்றுகொண்டிருக்கிறான். நின்றபடியே இருந்து, நம்மையெல்லாம் வென்று கொண்டிருக்கிறான்.

சின்னப் பிள்ளை என்று ஏமாற்றுகிறார்கள் என்றதால்தானோ என்னவோ, படைத்த பிரம்மனையே பிரணவப் பொருள் கேட்டு, கிடுக்கிப்பிடி போட்டான். சூரனை அழிக்க, படைவீடுகள் உருவாக்கினான். அதில் முக்கியமான ஆறு வீடுகள், ஆறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. பாலகனும் நானே. பலசாலி, பராக்கிரமசாலியும் நானே என்பதை உணர்த்தினான்.

ஆறுமுகங்களைக் கொண்டதால், அவனுக்கு ஆறுமுகம் என்று பெயர். சம்ஸ்கிருதத்தில், ஷண்முகம் என்று அர்த்தம். கடலோரத்தில் இருந்து கொண்டு ஆட்சி செய்வதால், செந்திலாண்டவர் எனும் பெயர் கொண்டான். இங்கே பாலகன் இல்லை அவன். அதேபோல், பிரம்மாவிடம் பிரணவப் பொருள் கேட்டான். சிறையிலடைத்தான். அப்பா சிவனார் தட்டிக் கேட்டார். ‘ அப்படியெனில் நீ சொல்லு’ என்றான். ஆக, அப்பனுக்கே பாடம் நடத்தினான். அதனால், சுவாமிகளுக்கெல்லாம் நாதனானான். சுவாமிநாதன் எனும் பெயர் பெற்றான்.

இப்படியெல்லாம் முருகப் பெருமைகளை அடுத்தடுத்த இன்னும் இன்னுமாக விவரமாகப் பேசுவோம்.

கந்தசஷ்டிக் கவசத்தில்... எல்லோருக்கும் பிடித்த வரிகள்...

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட!

இவ்வுலகின் மக்கள் அனைவரையும் கனகவேல் காக்கட்டும். வேல் போன்ற வேலவனின் கண்கள், நம்மை எப்போதும் பார்த்துக் கொள்ளட்டும். நம்மைத் தாக்குகிற , முடங்கச் செய்கிற தடைகளையெல்லாம் தாக்கட்டும். நம்மைப் பார்க்கப் பார்க்க, நம் பாவமெல்லாம் பொடிபடட்டும். தூள் தூளாகட்டும் !

சஷ்டியில், முருகக்கடவுளுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வேண்டிய வரங்களைத் தந்திடுவான், சக்திகுமரன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x