Published : 20 Oct 2020 10:58 AM
Last Updated : 20 Oct 2020 10:58 AM
ஒரு வருடத்தில் ஏகப்பட்ட பண்டிகைகள் உண்டு. எக்கச்சக்கமான பூஜைகள் இருக்கின்றன. ஏராளமான வழிபாடுகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான வைபவம்... நவராத்திரி. நவராத்திரி என்பது ஒன்பது நாள் விழா. பெண் தெய்வத்தை வணங்கும் விழா. சக்தியைக் கொண்டாடும் திருவிழா.
நவராத்திரியை மூன்று விதமாகக் கொண்டாடலாம். அதாவது மூன்று இடங்களில் கொண்டாடலாம். முதலாவது... நம்முடைய இல்லத்தில் நவராத்திரியைக் கொண்டாடி வழிபடலாம். இன்னொன்று... ஆலயங்களுக்குச் சென்று அங்கே கொண்டாடப்படும் நவராத்திரி வைபவத்தைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். மூன்றாவது... நவராத்திரி கொலு வைத்திருப்பவர்களின் இல்லங்களுக்குச் சென்று, சுமங்கலிகளாகச் சேர்ந்து அம்பாளை ஆராதித்து வேண்டிக்கொள்ளலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாள் வைபவத்தில்... சுண்டல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. பாயச வகைகளும் செய்யப்படுகின்றன. தினமும் ஒவ்வொரு விதமான சுண்டலோ பாயசமோ படையலிடுவார்கள். அதற்கு காரணமும் சொல்கிறார்கள் முன்னோர்கள்.
அதாவது தேவர்களுக்கு சிவனார் அமிர்தம் தந்து காத்தருளினார். அதேபோல், பூமியும் பூமியில் உள்ள மக்களும் உயிர் வாழ்வதற்கு மழை எனும் அமிர்தத்தைத் தந்தருளினார்கள் சிவனாரும் மகா விஷ்ணுவும். இந்த மழையால் பூமி செழித்துக் கொழிக்க, தானியங்கள் விளைந்தன.
தானியங்கள் என்பவை சக்தி. சக்தி என்பவள் பெண் தெய்வம். பெண் என்பவளே சக்திதான். எனவே சக்தி எனும் பெண் தெய்வங்களுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகிறது.அந்தப் பிரசாதத்தை, பெண்களுக்கு, அதாவது சக்திக்கு வழங்குகிறார்கள்.
தவிர, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய் முதலானவை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த நோய்களைப் போக்கும் சக்தி, தானியங்களுக்கு உண்டு. ஆகவே, நவராத்திரி நாளில் சுண்டலாகவும் பாயசமாகவும் தானியங்களைச் செய்து அனைவருக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் முன்னோர்கள்.
அக்கம்பக்கத்தினரிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழாவாகவும் உறவுகளை மேம்படுத்தும் விழாவாகவும் அமைந்திருக்கும் நவராத்திரிப் பண்டிகையை, சத்தான தானியத்தில் இருந்து சுண்டல் செய்து, நைவேத்தியம் படைத்து, பெண்களுக்கு வழங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT