Published : 19 Oct 2020 03:32 PM
Last Updated : 19 Oct 2020 03:32 PM
நவராத்திரி காலத்தில், நாகேஸ்வரி வழிபாடு செய்வதும் புற்றுக்குப் பாலிட்டு பிரார்த்தனை செய்வதும் விசேஷமானது. சர்ப்ப தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது என்பது ஐதீகம்.
நம்முடைய வழிபாடுகளில், புற்றுக்கும் புற்றுக் கோயில்களுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. நம்முடைய கிரகங்களிலும் சர்ப்ப கிரகங்களாகத் திகழும் ராகுவும் கேதுவுக்கும் அப்படியொரு மகத்துவம் இருப்பதைப் புராணங்களும் ஜோதிட சாஸ்திரங்களும் விவரித்துள்ளன.
நாகர் வழிபாடு ஆன்மிகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாகர்கோவிலில் நாகநாதர் குடிக்கொண்டிருக்கும் ஸ்தலமும் விசேஷம் மிக்க திருத்தலம் என்று போற்றப்படுகிறது. இதனால்தான் இந்த ஊருக்கு நாகர்கோவில் என்றே பெயர் அமைந்தது.
நாக கன்னியர், நாக தேவதை என்றெல்லாம் நாகத்துடன் தொடர்பு கொண்ட பெண் தெய்வங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி என்றே பெயர் கொண்ட அம்மன் கோயில்களும் இருக்கின்றன. இப்படிப் பெயர்கள் இல்லாமல், வேறு பெயருடன் அம்மன் புற்றுக் கோயில் அமைந்திருந்தாலும் அந்த ஆலயமும் சக்தி மிக்கதுதான்.
நாகேஸ்வரி குறித்து புராணமும் விவரித்துள்ளது.
ஜனமே ஜயன் என்பவன் பிரமாண்டமான சர்ப்ப யாகத்தை நடத்தினான். அந்த யாகத்தில் நாகங்கள் சிக்கி இறக்கும் நிலை உருவானது. அப்போது தேவியரில் மானஸாதேவி என்பவள், யாகத்தில் இருந்து நாகங்களைக் காத்தருளினாள். இதனால்தான் மானஸா தேவிக்கு நாகராணி என்றும் நாகேஸ்வரி என்றும் பெயர் அமைந்தது.
நாகேஸ்வரியின் குரு வேறு யாரும் அல்ல... சாட்ஷாத் சிவபெருமான் தான். அதனால்தான் நாக ஈஸ்வரி என்று ஈஸ்வரி பட்டமும் பெயருடன் இணைந்தது. ஞானகுருவாகத் திகழும் ஈசனிடம், சித்த யோகக் கலைகளையும் கற்றறிந்தாள். இதனால் நாகேஸ்வரிக்கு சித்த யோகினி எனும் திருநாமமும் அமைந்தது என்கிறது புராணம்.
நவராத்திரி காலத்தில், நாகேஸ்வரி எனப்படும் சித்தயோகினியின் திருப்புராண சரிதத்தைப் படிப்பதும் கேட்பதும் சொல்லுவதும் விசேஷமானது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, புற்றுக்கு பாலிடுங்கள். புற்றில் மஞ்சள் தூவி வழிபடுங்கள். சர்ப்ப தோஷம் விலகும். ராகு கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT