Published : 19 Oct 2020 12:52 PM
Last Updated : 19 Oct 2020 12:52 PM
நலமெல்லாம் நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நலம் தரும் நவராத்திரிப் பண்டிகை என்று போற்றுகிறோம். நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமாக சக்தி உபாஸனைகள் செய்யச் சொல்லி வலியுறுத்தியுள்ளது சாஸ்திரம். சக்தி என்று ஆராதிக்கப்படும் தேவியை, எப்படியெல்லாம் ஒவ்வொரு நாளும் பூஜிக்க வேண்டும், எந்த தேவியை நவராத்திரி நாட்களில் வழிபடவேண்டும் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்கின்றன சடங்குகள்.
நவராத்திரிக்கு உரிய சக்தி வடிவங்கள் கொண்ட கோயில்கள், தேவியர் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்கள் தமிழகத்திலோ வேறு மாநிலங்களிலோ இல்லை. ஆனால், காசியம்பதி என்று போற்றப்படுகிற காசியில், அமைந்துள்ளது என்பது மகத்தானது.
காசியில், காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றிலும் இப்படியான கோயில்கள் உள்ளன. நவராத்திரிக்கு உரிய அம்பிகைகள் கோயில் கொண்டிருக்கிறார்கள்.
காசியில் வருணை நதிக்கு அருகில் சைலபுத்ரி கோயில் உள்ளது. இதை மலைமகள் குடிக்கொண்டிருக்கும் ஆலயம் என்று போற்றுகிறார்கள். நவராத்திரியின் முதல் நாள் இந்த துர்கையை வழிபடுகிறார்கள்.இங்கே வந்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் விலகுவார்கள். மனதில் இருந்த பயமும் குழப்பமும் அடியோடு நீங்கிவிடும்.
இரண்டாம் நாளன்று துர்காகாட் படித்துறை அருகே உள்ள பிரம்மசாரிணி கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். இவரின் சந்நிதியில் நின்று மனதார வேண்டிக்கொண்டால், திருமணம் உள்ளிட்ட மங்கலத் தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
மூன்றாவது நாளன்று சௌக் கடைத் தெரு அருகே சித்திரா கண்டா அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கே அருள் மழை பொழியும் அம்பாளின் திருநாமம் சந்திரமணி தேவி. இவரை தரிசித்து வணங்கிப் பிரார்த்தனை செய்துகொண்டால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். காரியத் தடைகள் அகலும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும்.
நான்காவது நாளன்று சௌக் கடைத் தெருவில் உள்ள கூஷ்மாண்டா என்ற திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்கே உள்ள தேவி, கூஷ்மாண்டா அம்மன் என்று போற்றப்படுகிறாள். இவரை வணங்கித் தொழுதால், உறவுகளிடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
ஐந்தாவது நாளன்று ஜைத்புரா பகுதியில் உள்ள ஸ்கந்த மாதா என்கிற வாகீஸ்வரி அம்மனை வழிபடுவர். இவரை தரிசித்துப் பிரார்த்தனைகள் செய்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். வீட்டில் குழந்தைச் செல்வம் மட்டுமின்றி சகல செல்வங்களும் தந்தருள்வாள்.
ஆறாவது நாளன்று ஆத்மவிஸ்வேஸ்வரர் கோயிலின் பின்பக்க நுழைவாயிலை ஒட்டியுள்ள சுற்றுச் சுவரில் இருக்கும் காத்யாயினி அம்மன் சந்நிதி கொண்டிருக்கிறாள். காத்யாயினி அம்மன், வரப்பிரசாதி. இவளை மனமுருக வேண்டினால், தீய சக்திகளிடம் இருந்து காத்தருள்வாள். குடும்ப வளர்ச்சியையும் செழுமையையும் தந்தருள்வாள். மாங்கல்ய வரம் தருவாள்.
ஏழாம் நாளன்று, காளிகா எனும் பகுதியில் சிறியதொரு கோயிலில் அமர்ந்திருக்கிறார் அம்மன். இவளுக்கு காளராத்ரி துர்கை என்று திருநாமம். இவள் கழுதையை வாகனமாகக் கொண்டவள். இந்த துர்கையை மனதாரத் தொழுது கோரிக்கைகளை வைத்தால், துக்கத்தையெல்லாம் போக்கிடுவாள். மாங்கல்ய பலம் தந்திடுவாள். நல்ல கணவனையும் வாழ்க்கைத்துணையையும் அளித்திடுவாள்.
எட்டாவது நாளன்று, 8-வது நாளன்று காசியின் புகழ்பெற்ற அன்னபூரணியை தரிசிப்பார்கள். இவள்தான் காசியம்பதி என்று போற்றப்படும் காசி மாநகரின் நாயகி. தலைவி. உலகுக்கே படியளக்கும் சிவனாருக்காக, அன்னபூரணியாகத் திகழ்ந்து அகிலத்து மக்களுக்கு பசியாற்றுபவள். இவளை வணங்கினால் தனம் - தானியம் பெருகும். செல்வங்கள் சேரும்.
ஒன்பதாம் நாளன்று, காசி சித்தாத்ரி சங்கடா கோயில் என்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் மடம் உள்ளது. அந்த மடத்தில், ‘ஸித்தி மாதா’ எனும் திருநாமத்துடன் குடிகொண்டிருக்கிறாள் தேவி. இவளின் விக்கிரகத்துக்குக் கீழே உள்ள வெள்ளித் தொட்டி ஒன்றில் சிவலிங்கம் உள்ளது என்பது விசேஷம். இவளை வணங்கினால், மங்காத புகழையும் கெளரவத்தையும் அளித்திடுவாள். நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்வைத் தந்திடுவாள்.
அம்மன்கள் ஒன்பது பேரும் காசியில் பிரசித்தமானவர்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், சாந்நித்தியத்துடன் கூடிய அபாரமான விழாக்கள் என அமர்க்களப்படும்.
பத்தாம் நாளன்று, விஜயதசமி நன்னாளில், துண்டி விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர்- மற்றும் அன்னை விசாலாட்சியை தரிசிப்பார்கள். நவராத்திரி தரிசனத்தை நிறைவு செய்து தங்கள் பிரார்த்தனையை அம்பாளிடம், தேவியரிடம், நவராத்திரி நாயகியரிடம் முன்வைப்பார்கள் பக்தர்கள்.
இல்லத்தில் இருந்தபடியே, அம்பாளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கொலு வைத்திருப்பவர் வீடுகளுக்குச் சென்றால், அங்கே மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். மங்காத செல்வங்களைத் தந்து நம்மையும் நம் சந்ததியினரையும் வாழ்வாங்கு வாழச் செய்வார்கள் நவராத்திரி நாயகியர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT