Published : 22 Oct 2015 12:33 PM
Last Updated : 22 Oct 2015 12:33 PM
சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.
இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.
தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.
கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும். கோவில்களிலும், இல்லங்களிலும் லிங்கத் திருமேனி மூழ்கும் வண்ணம் சூடாறிய வெள்ளை அன்னத்தைக் கொட்டி மூடி, வெந்த காய்கறிகள், பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றை அடுக்கி லிங்க முகத்தையும் அழகுபடுத்துவார்கள்.
ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது. எனவே இந்த அன்னாபிஷேக சிவனை ஒரு முறை தரிசித்தால் கோடி சிவ தரிசனம் செய்த பலன் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த அன்னச் சிவரூபத்திற்கு தீபாராதனை காண்பித்த பின்னர், சிவன் மேல் பூசிய அன்னம் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படும். வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், இந்த அன்னப் பிரசாதம், சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
திருக்கோயில்களில் நடத்தப்படும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, விசேஷ ஹோமங்கள், நித்ய ஹோமங்கள், வேத பாராயணம், தீபாராதனை என அனைத்தும் ஆகம வழிப்படிதான் நடத்தப்படுகின்றன. அபிஷேகப் பிரியனான சிவனுக்குப் பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எழுபது வகையான அபிஷேகப் பொருட்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம். இந்த அபிஷேக அன்னத்தில் பாதி பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். மீதி நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக்கப்படும்.
அபிஷேக தரிசனப் பலன்
ஒவ்வொரு அபிஷேக லிங்க தரிசனமும் ஒவ்வொருவிதப் பலனை அளிப்பதாக நம்பிக்கை. அவை:
அன்னம் சாம்ராஜ்ஜியம்
பால் மோட்சம்
பச்சரிசி - திரவியம்
வெண்ணெய் மன மகிழ்ச்சி
ருத்திராட்சம் - ஞானவிருத்தி
விபூதி சகல செளபாக்கியம்
சந்தனம் - சகல இன்பம்
புஷ்பம் - ஆயுள் விருத்தி
சர்க்கரை - விரும்பிய இன்பம்
மாவு - உடல் வலிமை
பழம் பரம சுகம்
தயிர் நற்குணம்
தண்ணீர் - சகல மேன்மைகள்
தர்ப்பைப் புல் - லட்சுமி கடாட்சம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT