Published : 14 Oct 2020 10:00 PM
Last Updated : 14 Oct 2020 10:00 PM
‘யாருக்காவது ஒரு சாக்லெட் கொடுங்கள். ஒரேயொரு சாக்லெட்டாவது கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை இனிப்பாக்குவேன், கவலையே படாதீர்கள்’ என்கிறார் பகவான் சாயிபாபா.
பகவான் சாயிபாபா, இந்தக் கலியுகத்தில் மிகச்சிறந்த வரப்பிரசாதி. பாபாவை நம்பிக்கையுடன் சரணடைகிறவர்களை ஒருபோதும் பாபா கைவிடுவதே இல்லை என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் சாயி பக்தர்கள்.
அதனால்தான், சாயி பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் சாயிபாபாவுக்கான ஆலயம் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
சாயி பஜனில் கலந்துகொண்டு, சாயி பகவானுக்கு நடைபெறும் ஆரத்தியில் கலந்துகொண்டு சாயிபாபாவை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு, பகவான் ஷீர்டி சாயிபாபா தன் அருளாடல்களை நிகழ்த்துவார் என்று சிலிர்ப்பும் மகிழ்வுமாகத் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
‘எங்கே உண்மை இல்லையோ அங்கே நானும் இருக்கமாட்டேன்’ என்கிறார் சாயிபாபா. எவரிடம் உண்மை இருக்கிறதோ யாரெல்லாம் உண்மையுடனும் ஒழுக்கத்துடனும் இருக்கிறீர்களோ அவர்களுக்கு ஏதேனும் ஒரு மார்க்கமாக, ஏதேனும் ஒரு வடிவத்தில் வந்து அவர்களை வழிநடத்துவேன். உண்மையை நம்புங்கள். ஒழுக்கமே எனக்கான பூஜை என்று நம்புங்கள். என்னை முழுவதுமாக நம்புங்கள். அவர்கள் ஒரேயொரு முறை என் சந்நிதிக்கு வந்து நின்றாலே போதும்... அவர்களை இனி நான் பார்த்துக்கொள்வேன். அவர்களின் பிறவிக்காலம் முழுமைக்கும் அவர்களைக் காப்பேன்’ என அருளியுள்ளார் சாயிபாபா.
அதனால்தான் தமிழகத்தில் பல ஊர்களில் சாயிபாபா கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து எந்த ஊருக்கு பைபாஸ் சாலையில் சென்றாலும் அங்கே சாயிபாபா கோயில்களை பார்க்கலாம். தரிசிக்கலாம்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில், திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில், அக்கரைப்பட்டி எனும் கிராமத்தில், மிகப்பிரமாண்டமாக கோயில் கொண்டிருக்கிறார் சாயிபாபா. இங்கே சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்திருக்கிறது என்று உணர்ந்து சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.
‘என் பெயரை உச்சரியுங்கள். மனதுக்குள் என் பெயரை உச்சரித்துக்கொண்டே, யாருக்கேனும் ஒரு இனிப்புப் பண்டம் வாங்கிக் கொடுங்கள். ஒரேயொரு சாக்லெட் வாங்கிக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கப் பண்ணுவேன்’ என அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
சாயி பக்தர்கள், குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமைகளில், ‘சாயிராம் சாயிராம் சாயிராம்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, எவருக்கேனும் சாக்லெட் வழங்குங்கள். அந்த இனிப்பு, சாயிபாபாவின் திருப்பாதங்களுக்கு சமர்ப்பணாகிவிடும். அது சாயிபாபாவே பெற்றுக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குருவார வியாழக்கிழமையில், சாயிராம் சாயிராம் சாயிராம் என்று சொல்லி, சாக்லெட் கொடுத்துவிட்டீர்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT