Published : 14 Oct 2020 09:32 PM
Last Updated : 14 Oct 2020 09:32 PM
புரட்டாசி மாதத்தின் கடைசி வியாழக்கிழமையில், தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யுங்கள். ஞானமும் யோகமும் பெறுவீர்கள்.
புரட்டாசி மாதம் என்பதே வழிபடுவதற்கான மாதம். புரட்டாசி மாதம் பூஜைகளுக்கான மாதம். புரட்டாசி மாதம் என்பது பிரார்த்தனைகளுக்கான மாதம். புரட்டாசி மாதம் என்பதே ஜபதபங்களுக்கான மாதம்.
இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள், மிக வலிமையானவை. இந்த மாதத்தில் நாம் வைக்கக் கூடிய பிரார்த்தனைகள் உடனே நிறைவேறிவிடும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் என்பது மகாளய பட்சம் எனும் புண்ய காலம் கொண்ட மாதம். நமக்கெல்லாம் ஆச்சார்ய ஸ்தானத்தில், குரு ஸ்தானத்தில் இருக்கிற நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. இந்தமுறை புரட்டாசிக்கு முன்னதாகவே மகாளய பட்ச காலம் வந்துவிட்டிருந்தது.
முன்னோர்களை வணங்குவது போலவே குருவையும் வணங்கக் கூடிய அற்புதமான மாதம். ஞானகுருவாகத் திகழும் முருகப்பெருமானை வணங்கி வழிபடலாம். அதேபோல் தட்சிணாமூர்த்தியாக சிவனார், கல்லால மரத்தடியில் இருந்தபடி சனகாதி முனிவர்களுக்கு அருளி உபதேசித்தார். ஞானமூர்த்தி சொரூபமாகக் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடலாம்.
எல்லா சிவாலயங்களிலும் சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்திக்கு சந்நிதி இருக்கும். தென்முகக் கடவுள் என்றே போற்றப்படுகிறார் தட்சிணாமூர்த்தி.
வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். வியாழக்கிழமை என்பது குருவை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். இந்த நன்னாளில், குருவை வணங்குவோம். குரு பிரம்மாவை வணங்குவோம். ஞானகுருவாகத் திகழும் முருகக் கடவுளை பிரார்த்திப்போம். நவக்கிரத்தில் உள்ள குரு பகவானை வணங்குவோம்.
முக்கியமாக, தட்சிணாமூர்த்தி சொரூபமாக திருக்காட்சி தரும் சிவனாரை, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கிப் பிரார்த்திப்போம்.
தட்சிணாமூர்த்தியின் மூல மந்திரம் சொல்லி, தட்சிணாமூர்த்தியின் ஸ்லோகங்களைச் சொல்லி மனதார வழிபடுவோம். மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். குரு பலம் கிடைத்து இனிதே வாழ்வீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT