Published : 14 Oct 2020 11:11 AM
Last Updated : 14 Oct 2020 11:11 AM
புரட்டாசி மாதத்தில், புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்துள்ளது. இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.
புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம். இந்த மாதம் முழுவதுமே துளசி தீர்த்தம் பருகுவதும் பெருமாளுக்கு துளசிமாலை சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும்.
அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.
புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. அதுவும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட தருணத்தில், புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்திருப்பது நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.
இன்று புதன்கிழமை 14.10.2020 பிரதோஷம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.
பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT