Published : 13 Oct 2020 01:19 PM
Last Updated : 13 Oct 2020 01:19 PM
‘’உங்களின் கடமையை நீங்கள் செய்துகொண்டே இருந்தால்,நான் என்னுடைய கடமையை உங்களுக்குச் செய்துகொண்டே இருப்பேன். உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கச் செய்வேன்’’ என்று பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.
ஷீர்டி எனும் புண்ணிய பூமியில் இருந்து அகிலத்து மக்களைக் காத்து அருளிக்கொண்டிருக்கிறார் சாயிபாபா. மண்ணுலகில் அவதரித்த மகான்கள் எத்தனையோ பேர். அவர்கள் அனைவருமே நமக்காக ஒவ்வொரு தருணங்களிலும் அருளிக்கொண்டிருக்கிறார்கள்.
கலியுகத்தில், கண்கண்ட மகான் என்றும் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருபவர் என்றும் பகவான் ஷீர்டி சாயிபாபாவைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
அதனால்தான் ஷீர்டிபாபாவுக்கு பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த இருபது வருடங்களில், குழந்தைகளுக்கு ‘சாய்’ என்று சேர்த்து பெயர் சூட்டுவது அதிகரித்திருக்கிறது. ‘சாய் பல்லவி’, ‘சாய் விக்னேஷ்’ என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
பகவான் சாயிபாபாவின் புண்ணிய பூமியான ஷீர்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து, இந்தியாவில் பல ஊர்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல ஊர்களில், சாயிபாபா கோயில்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பிறவியில் நமக்கான கடமைகள் என்று இருக்கின்றன. மனிதனாகப் பிறந்தவர்களுக்கென இருக்கும் கடமைகளில் இருந்து நாம் ஒருபோதும் நழுவிவிடக் கூடாது. எந்தப் பிறவியில் செய்த பாவங்களைக் கழிப்பதற்காகத்தான் இந்தப் பிறவியில் மனிதப் பிறப்பெடுத்திருக்கிறோம். இந்தப் பிறப்பில், நாம் செய்யும் புண்ணியங்களும் நல்லவைகளுமே பாவங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும்.
‘உங்களுக்கு அனுக்கிரஹம் வேண்டும் என்றால், உங்கள் கடமையில் இருந்து ஒருபோதும் நழுவாதீர்கள்’ என்கிறார் சாயிபாபா. ‘மனிதனாகப் பிறந்த ஒவ்வொருக்கும் கடமைகள் இருக்கின்றன. நீங்கள் பெற்றோருக்குச் செலுத்தும் கடமை இருக்கிறது. அதேபோல் உங்களின் மனைவிக்கும் மக்களுக்கும் செய்யும் கடமை இருக்கிறது. பெற்றோருக்கும் மனைவி மக்களுக்கும் ஆற்றுகிற கடமையைச் செய்யாமல் இருக்காதீர்கள்.
அதேபோல், மனிதராகப் பிறந்திருக்கிற உங்களுக்கு, அடுத்தவரின் பசியைப் போக்குகிற கடமையும் இருக்கிறது. அடுத்தவரின் பசியை நீங்கள் போக்குகிற கடமையைச் செய்துகொண்டே இருங்கள். நான் உங்கள் குடும்பத்தின் பசியை ஆற்றுவேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.
‘நீங்கள் அடுத்தவரின் வயிறை அலட்சியமாகக் கருதினால், உங்களுக்கு எதுவுமே செய்யாதவனாகத்தான் நானிருப்பேன். யாரெல்லாம் அடுத்தவருக்காக கருணையுடன் செயலாற்றுகிறார்களோ, எவரெல்லாம் பிறரின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து கண்ணீர் சிந்துகிறார்களோ, அவர்களின் துக்கங்களையும் வருத்தங்களையும் போக்குவதே என்னுடைய கடமை.
ஆகவே, என்னுடைய அன்பர்களாகிய நீங்கள், உங்களுக்கான கடமையைச் செய்துகொண்டே இருங்கள். உங்கள் பெற்றோரை குழந்தைகளாக பாவித்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மீதும் வாரிசுகளின் மீதும் உண்மையான அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யாதீர்கள். இந்த சமூகத்துக்கும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்து, உங்கள் கடமைகள் என்னவோ அதன்படி நடந்துகொள்ளுங்கள். நான் என்னுடைய கடமையின்படி, உங்களுக்கு அருளுவேன். ஒருபோதும் உங்களை கைவிடமாட்டேன். உங்களைக் கைவிடாமல், உங்களுக்கு அரணாக இருந்து, உங்களைக் காப்பதும் உங்களுக்கு அருளுவதும்தான் என்னுடைய கடமை’’ என்று அருளியுள்ளார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
பாபாவின் அன்பர்கள் அனைவரும் அவரவர் கடமையைச் செவ்வனே செய்வோம். செம்மையாகச் செய்வோம். பாபா, அவரின் கடமையில் இருந்து ஒருபோதும் நழுவமாட்டார். நம்மை அரண் போல் இருந்து காத்தருள்வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT