Published : 13 Oct 2020 11:34 AM
Last Updated : 13 Oct 2020 11:34 AM
வயலூர் முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் தந்தருள்வான் ஞானவேலன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
பெயருக்கேற்றது போலவே, வயலும் நெல்லும் பசுமையும் திகழக் காட்சி அளிக்கும் சின்னஞ்சிறிய கிராமம் வயலூர். திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர், உய்யகொண்டான் திருமலை வழியாக சுமார் 15 கி.மீ. பயணித்தால், வயலூர் திருத்தலத்தை அடையலாம்.
வயலூர் என்பது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் அற்புதமான திருத்தலம். முருகப்பெருமான் தன் வேலினால் தடாகம் உண்டாக்கிய தலம். அந்தத் தடாக நீரை எடுத்து அம்மையப்பனுக்கு அபிஷேகித்து பூஜைகள் செய்து சிவ பார்வதியின் அருளைப் பெற்ற திருத்தலம். எனவே இந்தத் தலத்தின் தீர்த்தம் ரொம்பவே விசேஷமானது என்கிறது ஸ்தல புராணம்.
இந்தத் தலத்து முருகப் பெருமான் கொள்ளை அழகு. இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் தந்தருள்வார் முருகப் பெருமான் என்கிறது ஸ்தல புராணம்.
திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரிநாதருக்கு, நாவில் ஓம் எனும் பிரணவத்தை எழுதி அருளினார் முருகப்பெருமான். வயலூர் திருத்தலத்துக்கு வந்த அருணகிரிநாதர், முருகப்பெருமானை உருகி உருகிப் பாடியிருக்கிறார். திருப்புகழில் வயலூர் முருகப்பெருமானைப் பாடிய பாடல்கள் இன்றைக்கும் பக்தர்களால் பாடப்படுகின்றன.
இந்தத் தலத்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக்கொண்டால், குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இந்தத் தலத்தின் சாந்தித்தியத்தை உணர்ந்து சிலிர்த்திருக்கிறார். கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.
9ம் நூற்றாண்டின் திருக்கோயில் இது. உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று கல்வெட்டுகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
இந்தத் தலத்தின் இறைவன் ஆதிநாத சுவாமி. அம்பாளின் திருநாமம் ஆதிநாயகி. இந்தத் தலத்தில், சக்தி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சர்ப்ப தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இங்கே உள்ள சிவானரையும் அம்பாளையும் முருகப் பெருமானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், எதிர்ப்புகளெல்லாம் விலகும். இம்மையில், இந்தப் பிறவியில் எல்லா சத்விஷயங்களையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
வயலூர் முருகன் கோயிலில், குழந்தையை தத்துக்கொடுக்கும் பரிகாரம் ரொம்பவே விசேஷமானது. குழந்தைக்கு அடிக்கடி உடல்நலமில்லை, சரியாகச் சாப்பிடவில்லை, இரவில் பயந்து அழுதுகொண்டே இருக்கிறது என்பதான பிரச்சினைகள் இருந்தால், இங்கே வந்து, ‘இந்தக் குழந்தை உன் குழந்தை’ என்று தத்துக்கொடுக்கும் பரிகாரம் செய்கிறார்கள். குழந்தையை தத்துக்கொடுத்துவிட்டு அழைத்துச் சென்றால், இனி குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்; வளர்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வைகாசியில் விசாகப் பெருந்திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
வயலூர் முருகப்பெருமானை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் முருகக் கடவுளை தரிசியுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT