Published : 30 Sep 2020 06:03 PM
Last Updated : 30 Sep 2020 06:03 PM
‘பொறுமையாக இருந்து உன்னுடைய கடமைகளைச் செம்மையாக செய்துகொண்டே இரு. நான் இருக்கிறேன். நீ பயணிக்கும் இடங்களிலெல்லாம் நிழலாக நான் வருவேன். உன்னைக் காப்பேன்’ என்று பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.
பகவான் சாயிபாபாவின் பக்தர்கள், தொடர்ந்து பாபாவின் வழிகாட்டுதலின் படியும் அவரை வணங்கியபடியும் பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஷீர்டி எனும் ஒரு கிராமம், மிகப்பெரிய புண்ணியத் திருத்தலமாக மாறியிருக்கிறது. ஷீர்டி கிராமத்தில் பாபாவின் காலடி படாத இடமே இல்லை. ஷீர்டில் அமைந்துள்ள ஆஸ்ரமம், எத்தனையோ சேவைகளை இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு செய்யப்படுகிற எல்லாமே பாபா தொடங்கி வைத்த சேவை.
பாபா, தினமும் தன்னுடைய பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எத்தனையோ வேதனைகளுடனும் துன்பங்களுடனும் கண்ணீருடன் வரும் தன் அன்பர்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்.
அப்போது தன்னிடம் வரும் பக்தர்களிடம், ‘துன்பம் வந்துவிட்டதே என்று ஒருபோதும் கலங்கித் தவிக்காதீர்கள். ‘என்னிடம் பணமில்லையே’ என்று பணத்தை எப்படியாவதும் சம்பாதிக்கவேண்டும் என்று மனதுக்குள் பதட்டம் கொள்ளாதீர்கள். பொறுமையாக இருந்து செயல்படுவதுதான் நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ளும் முக்கியமான வழி.
எனவே, எதையும் பொறுமையாகவும் நிதானத்துடனும் கையாளுங்கள். உங்கள் வேலையிலும் சம்பாத்தியத்திலும் தொழிலிலும் வியாபாரத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். அந்த வேலைகளில் நான் கூடவே இருக்கிறேன். உங்கள் வியாபாரத்திலும் தொழிலிலும் உங்களுடனேயே இருக்கிறேன். எனவே உங்கள் கஷ்டங்களை என்னிடம் கொடுத்துவிட்ட பிறகு மீண்டும் ஏன் கவலைகளில் உழல்கிறீர்கள். துக்கங்களை என்னிடம் இறக்கிவைத்துவிடுங்கள். பிறகும் எதற்காக சோகத்திலேயே இருக்கிறீர்கள்.
ஆகவே, உங்கள் செயலில் எப்போதும் பொறுமை இருக்கட்டும். நிதானம் இருக்கட்டும். பக்குவமும் தெளிவும் கொண்டு பணியாற்றுங்கள். நீங்கள் பயணிக்கும் இடங்களுக்கெல்லாம் உங்களுக்கு நிழலாக நானும் வருகிறேன். உங்களின் சந்தோஷங்களுக்கு நான் அருள்புரிவேன்.
என்னைச் சரணடைந்து விட்டேன் என்று சொல்லுகிற அன்பர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். பொறுமையுடன் இருந்தீர்களென்றால், நிதானத்துடன் இருந்தீர்களென்றால், உங்களின் நிழலாக, உங்களுடன் நான் வருவதையும் உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்’’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா.
பாபா இருக்கிறார். பாபா நம்மைப் பார்த்துக்கொள்வார். பாபாவை சரணடைவதே வெற்றிக்கு வழி என்பதை பரிபூரணமாக நம்புங்கள். உறுதியாக இருங்கள். பதட்டமே இல்லாமல், பொறுமையுடன் செயலாற்றுங்கள். பாபா உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT