Published : 10 Sep 2015 11:34 AM
Last Updated : 10 Sep 2015 11:34 AM
கல்வி ஆரம்பிக்கிற சமயத்தில், கல்யாண காலத்தில், ஒரு இடத்துக்குப் புதிதாக போகிறபோது, ஒரு இடத்திலிருந்து புறப்படும்போது, யுத்த சமயத்தில், இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போவானேன்? “சகல காரியத்திலும்”, என்று சொல்லி விடலாம். சகல காரியத்திலும் எவனோ ஒருத்தனுக்கு இடைஞ்சல் என்பதே ஏற்படுவது இல்லை.
வித்யாரம்பே விவாஹே ச பிரவேஷே நிர்கமே ததாமி
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே II
“வித்யாரம்பே” - படிப்பு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து பிரம்மச்சரிய ஆசிரமம். அந்த ஆசிரமம் வகிக்கிற காலத்தில் இடைஞ்சல் வராது.
"விவாஹே ச"- கல்யாணத்தின் போதும். அதாவது கிருகஸ்தாச்ர மத்திலும் இடையூறு வராது.
ரொம்ப சொல்பப் பேரே சந்நியாஸ்ச்சரமம் வாங்கிக் கொள்வதால், பிரம்மச்சரிய - கிருகதாச்ரமங்களைச் சொன்னதிலேயே ஒரு மநுஷ்யனின் வாழ்நாள் முழுவதையும் சொன்னதாக ஆகிவிட்டது. வாழ்க்கை பூரா அவனுக்கு இடையூறு இல்லை.
வாழ்க்கை என்கிறது என்ன? பல தினுசான சலனங்கள்தான். இப்போது இருப்பது நாளைக்கு இல்லை என்று மனசாலேயும், வாக்காலேயும், சரீரத்தாலேயும், புத்தியாலேயும், பணத்தாலேயும் பல தினுசான காரியங்களைப் பண்ணி மாறிக்கொண்டே இருப்பதுதான். ஆலோசித்துப் பார்த்தால் தெரியும். Life என்பது Movement தான் என்று.
இதிலே சரீரத்தினால் தெரியும் மூவ்மெண்டுகள்தான் பளிச்சென்று தெரிவது. அதிலேயும் சரீரம் முழுவதையும், ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் பிரயாணம் பண்ணுகின்றோமே, அதுதான் முக்கியமான ‘மூவ்மெண்டாக' தெரிகிறது. அதைத்தான் ‘ப்ரவேஸ நிர்கமே ததா' என்று சொல்லியிருக்கிறது. ‘ப்ரவேஸம்' ஒரு இடத்துக்குள்ளே போவது. ‘நிர்கமம்' ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் போவது.
இப்படியே எந்த விதமான மூமெண்டாலும் ஏதோ ஒரு விஷயத்துக்குள் பிரவேச்சிக்கிறோம். ஏதோ ஒன்றை விட்டுவிட்டுப் புறப்படவும் செய்கிறோம். இவை எல்லாவற்றிலும் ஒருத்தனுக்கு இடைஞ்சல் வராது. வாழ்க்கையைச் சலனம் என்று சொன்னேன். இன்னொரு ‘டெஃபனிஷன்' (இலக்கணமும்) சொல்லுகிறதுண்டு. பத்திரிக்கைகளில் அந்த ‘டெஃபனிஷன்' தான் ரொம்பவும் அடிபடுகிறது. வாழ்க்கைப் போராட்டம், “வாழ்க்கைப் போராட்டம்” என்றே நிறையக் கேட்கிறோம். டார்வின் தியரி, ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடிப் போராடித்தான் ஜீவ குலம் உருவாயிருக்கிறது என்றே சொல்கின்றன.
யோசனை பண்ணிப் பார்த்தால் சலனமும், போராட்டமும் ஒன்றுக்கொன்று ‘கனெக்க்ஷன்' உள்ளவை என்று தெரியும். யாரோ ஒரு ஜீவனுக்கு மட்டும் சலனம். மற்றதெல்லாம் சலனமில்லாமல் இருக்கிறது என்றால்தான் இந்த ஒருத்தன் தன் இஷ்டப்படி சுமூகமாக சஞ்சாரம் பண்ண முடியும். (எல்லா தினுசு சஞ்சாரங் களையும்தான் சொல்கிறேன்) ஆனால் வாஸ்தவத்தில் அப்படியா இருக்கிறது? அத்தனை ஜீவராசி களுக்கும்தான் ஒயாத சலனமாக இருக்கிறது. அசேதன வஸ்துகளிலுங்கூட ஒரே சலனம். ஒரு அணுவுக்குள்ளே எலெக்ட்ரிசிடியின் வேகத்தோடு சதா சஞ்சாரம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல உயிர்களும், ஜட வஸ்துக்களும் ஒரே சமயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கிடையே மோதல்களும் உண்டானபடிதானே இருக்கும்? போராட்டம் என்பது மோதல்தானே?
இன்னும் அடிப்படைக்குப் போனால் ஒரு ஜீவனோ, ஜடமோ சலனம் அடைகிறதென்பதே போராடுவதுதான். சாந்தம் வந்துவிட்டால் நிச்சலனமாக அடங்கிப் போய்விடுவோம் என்று நன்றாகத் தெரிகிறதோல்லியோ? ஆகையால் சலனம் இருந்தால் சாந்தி இல்லை என்று ஆகிறது. சாந்தி இல்லாமலிருப்பதுதான் போராட்டம். War and Peace என்று எதிர்ப் பதங்களைச் சொல்கிறோமல்லவா?
வாழ்க்கையே போராட்டம் என்றாலும், குறிப்பாக அப்படித் தெரிவது ஒருத்தரோடொருத்தர் போட்டுக்கொள்ளும் சண்டைதான். அதைத்தான் “ஸங்க்ராமே” என்று சொல்லியிருக்கிறது. “ஸங்க்ராமம்” என்றால் யுத்தம்.
யுத்தத்தில் ஒருத்தனுக்கு இடையூறு வராது. அவன் ஐயசாலியாக விளங்குவான். நீட்டி அர்த்தம் பண்ணிக்கொண்டால், வாழ்க்கையின் அநேக பிரவேச - நிர்கமங்களான போக்குவரத்துக்களிலேயும், சகலவிதமான போராட்டங்களிலேயும் அவன் இடையூறு எதுவுமில்லாமல் வெற்றியோடு விளங்குவான்.
சுருக்கமாக அனைத்தும் அடக்கி எல்லா காரியத்திலேயும் - “ஸர்வ கார்யேஷு” அவனுக்கு இடைஞ்சல் இல்லை. அதாவது வெற்றிதான் என்று சுலோகத்தை முடித்திருக்கிறது.
ஸர்வ கார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே
“தஸ்ய” அவனுக்கு, ‘ஸர்வ கார்யேஷு'- ஸகல காரியங்களிலேயும் “விக்ன”- இடைஞ்சல். “ந ஜாயிதே” உண்டாவதில்லை.
ஸர்வ கார்யேஷு விக்நஸ் - தஸ்ய ந ஜாயதே ஸகல காரியங்களிலும் அவனுக்கு விக்னம் என்பது உண்டாவதில்லை.
அவனுக்கு என்றால் எவனுக்கு?
‘ஏதாநி”- இந்த அதாவது இதற்கு முன்னே சொன்ன; “ஷோடச நாமாதி”- பதினாறு பெயர்களை; “ய”;- எவன்; “படேத்”- படிக்கிறானோ. “அபி” என்றால் இங்கே “அல்லது” என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் - அல்லது. “ச்ருணுயாத்” - கேட்கிறானோ அவனுக்குத்தான் ஸர்வ காரியங்களிலும் விக்னம் ஏற்படுவதில்லை. “விக்நஸ் - தஸ்ய ந ஜாயதே”.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT