Published : 25 Sep 2020 11:40 AM
Last Updated : 25 Sep 2020 11:40 AM
சுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுங்கள். கடன் முதலான பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். பொன்னும் பொருளும் சேரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம். மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். முக்கியமாக இந்த மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். எனவே, புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள். பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பார்கள்.
மேலும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கும் பக்தர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் பல ஆலயங்களில் பெருமாள் கோயில்களில், பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெறும். தினமும் சிறப்பு ஆராதனைகள், திருவீதியுலாக்கள் முதலானவை நடைபெறும்.
இந்த புரட்டாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்பதால், மகாவிஷ்ணுவை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவது மகத்தான பலன்களை வழங்கும். இதுவரை பட்ட கஷ்டங்களிலிருந்து நிவர்த்தியைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பெருமாளை மட்டும் வழிபடும் மாதம் அல்ல இது. பெருமாளின் துணைவியாரான மகாலக்ஷ்மியை வழிபடுவதற்கும் உரிய மாதம் இது. தன் மார்பிலேயே மகாலக்ஷ்மியை குடியமர்த்தி வைத்திருக்கிறார். எனவே மகாலக்ஷ்மித் தாயாரை புரட்டாசி மாதத்தில் பிரார்த்தனை செய்து வந்தால், இதில் குளிர்ந்து போவார் மகாவிஷ்ணு. அதில் மகிழ்ந்து நமக்கு சகல விதமான நலன்களையும் அருளுவார் என்பது பக்தர்களின் ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில், மகாலக்ஷ்மியை கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவது விசேஷம் மிக்கது. இல்லத்தில் நல்ல அதிர்வலைகளைக்கொண்டு வரும். இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். கோயிலுக்குச் சென்று தாயாருக்கு குங்கும் அர்ச்சனை செய்துகொண்டு வழிபடலாம். அதேபோல், இல்லத்தில் விளக்கேற்றி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, மகாலக்ஷ்மி படத்துக்கோ அல்லது சிலைக்கோ குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
இல்லத்தில் இதுவரை இருந்த கடன் தொல்லைகள் யாவும் நீங்கும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT