Published : 25 Sep 2020 11:04 AM
Last Updated : 25 Sep 2020 11:04 AM
புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்று சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்கு உரிய மாதம். பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வணங்குவதும் விரதம் மேற்கொள்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதத்தில், மகாவிஷ்ணு வழிபாடு மகத்தான பலன்களைத் தந்தருளக் கூடியது. புரட்டாசி மாதத்தில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அல்லது நமக்கு இஷ்டமான பெருமாள் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.
பக்தர்கள் பலர், மாதந்தோறும் வாங்குகிற சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை, தனக்கு இஷ்டமான ஆலயமான திருப்பதி கோயில், திருவரங்கம் ஆலயம், குணசீலம் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் திருக்கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோயில் பெருமாள் என தங்களுக்கு இஷ்டமான பெருமாள் கோயிலுக்கு என சம்பளத்தின் குறிப்பிட்ட தொகையை சேர்த்துக் கொண்டே வருவார்கள்.
பின்னர், புரட்டாசி மாதத்தில் அந்த க்ஷேத்திரத்துக்குச் சென்று பெருமாளுக்கு வஸ்திரமும் தாயாருக்கு புடவையும் சமர்ப்பித்து, ஆலயத்தின் உண்டியலில் சேர்த்து வைத்த காணிக்கையைச் செலுத்தி பிரார்த்தனையை நிவர்த்தி செய்வார்கள். இன்னும் சில பக்தர்கள், புரட்டாசி மாதத்தில்தான், முடி காணிக்கை செலுத்துதல் முதலான நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
புரட்டாசி மாதத்தில், பெருமாளுக்கான நேர்த்திக்கடனைச் செலுத்துவது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துவது விசேஷமானது. அதேபோல், தினமும் துளசி தீர்த்தம் பருகுவதும் துளசிக்கு தண்ணீர் வார்ப்பதும், திருமண் இட்டுக்கொண்டு பெருமாளை ஸேவிப்பதும் மகத்தான பலன்களைத் தருவது உறுதி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
புரட்டாசி மாதத்தில் ‘நாராயணா’ என்றும் ‘கோவிந்தா’ என்றும் ‘பெருமாளே’ என்றும் மகாவிஷ்ணுவின் எந்தத் திருநாமங்களையேனும் சொல்லி வாருங்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். காரியங்கள் வெற்றியடையும்.
பெருமாளுக்கு, காணிக்கையாக ஒருரூபாயை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல்களை பெருமாளிடம் சொல்லி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள்வார் பெருமாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT