Published : 24 Sep 2020 11:05 AM
Last Updated : 24 Sep 2020 11:05 AM
‘’அவமானங்களும் துக்கமும் பார்க்காதவர்கள் எவருமில்லை. என்னுடைய அன்பர்கள், உங்களுடைய அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள். இனி உங்களுக்கு அவமானங்களுக்கு பதிலாக கெளரவமும் துக்கத்துக்கு பதிலாக சந்தோஷமும் தருவேன்’’ என்கிறார் பகவான் சாயிபாபா.
ஷீர்டி சாயிபாபா, உன்னதமான மகான். வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். மக்களை உய்விக்க வந்த மகான் சாயிபாபா என்று அதனால்தான் போற்றி வணங்குகிறார்கள் பக்தர்கள்.
ஷீர்டி என்பது பகவான் சாயிபாபா வாழ்ந்த புண்ணிய பூமி. அங்கிருந்து கொண்டே மொத்த உலகையும் தன் சக்தியால் வியாபித்து அருளினார் பாபா.வடமாநிலங்களில் பாபாவை அறிந்து உணர்ந்து பக்தர்களானார்கள். பல ஊர்களில் பாபாவுக்கு சிலை எழுப்பி, பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.
தென்னகத்திலும் இந்த நிலை வந்தது. தென் மாநிலங்களில் பாபாவை அறிந்துணர்ந்து, பக்தர்களானார்கள். வார்த்தைகளில், என்ன பேசினாலும் ‘சாயிராம்’ என்று உச்சரிக்கத் தொடங்கினார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ‘சாய்’ சேர்த்து பெயர் சூட்டி அழைத்தார்கள்.
‘’என்னுடைய பெயரை யாரெல்லாம் உச்சரிக்கிறார்களோ, அங்கே நான் வந்துவிடுவேன்’’ என்று அருளியிருக்கிறார் சாயிபாபா. ‘என் பெயர் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கே அந்த இடத்தில் நான் நிரம்பி, அந்த ஸ்தலத்திலும் நான் வாசம் செய்வேன்’’ என்று அருளியுள்ளார்.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் பாபாவுக்கு பல ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அங்கே, ஷீர்டியைப் போலவே பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. முக்கியமாக, எத்தனையோ குறைகளுடனும் வேதனைகளுடனும் வந்து பாபாவை வணங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.
’’என்னுடைய அன்பர்களுக்கு ஒரு அவமானம் என்றால் நான் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டேன். அவர்களின் துக்கத்தைப் போக்குவதை விட வேறென்ன வேலை இருக்கிறது எனக்கு? உங்களுடைய அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள். ‘பாபா ஒரு குற்றமும் செய்யாத எங்களை நீதான் பார்த்துக்கணும்’ என்று சொல்லி அவமானத்தை, துக்கத்தை, தோல்விகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள். இனி உங்களை, என்னுடைய அன்பர்களை நான் பார்த்துக்கொள்வேன்.
அந்த அவமானங்களெல்லாம் இனி கெளரவமாகக் கிடைக்கப் பெறுவீர்கள். துக்கத்தையெல்லாம் சந்தோஷமாக மாற்றித் தருவேன். தோல்விகளையெல்லாம் வெற்றியாக்கிக் கொடுப்பதே என்னுடைய வேலை’’ என அருளியிருக்கிறார் ஷீர்டி சாயிபாபா.
வியாழக்கிழமைகளில், சாயிபாபாவை வணங்குங்கள். தமிழகம் முழுவதும் பல ஊர்களில் பாபாவுக்கு கோயில்கள் இருக்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள பாபா கோயிலுக்குச் சென்று, பாபாவை வழிபடுங்கள். அங்கே பாபாவுக்கு முன்னே அமர்ந்துகொண்டு ‘சாயி ராம்’ என்று 108 முறை மனதுக்குள் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களுக்கு நல்வழி காட்டுவார் சாயிபாபா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT