Last Updated : 22 Sep, 2020 10:41 AM

 

Published : 22 Sep 2020 10:41 AM
Last Updated : 22 Sep 2020 10:41 AM

செவ்வாய்... சஷ்டி... கந்தசஷ்டி கவசம்; வீடு மனை யோகம் நிச்சயம்!


செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்த நன்னாளில், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்குங்கள். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். வேண்டிய வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான். வேலவனை வேண்டுவோம். வேதனைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிவடிவேலன்.

சஷ்டி என்பது சக்திவேலனுக்கு உரிய நாள். தை மாத பூசம், பங்குனி உத்திரம், வைகாசியின் விசாகம், ஆடியின் கிருத்திகை முதலானவையெல்லாம் முருகனுக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்தநாட்களில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

அதேபோல், தைப்பூச நாளில் பழநி, திருச்செந்தூர் முதலான தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகக் கடவுளை தரிசிப்பார்கள். காவடி எடுத்தும் பால் காவடி எடுத்தும் வருவார்கள்.

முருகப்பெருமான், உலகாளும் சிவபெருமானின் மைந்தன் என்றாலும் ஞானகுரு என்றே முருகப்பெருமானைப் போற்றுகிறது புராணம். பிரணவப் பொருளை எடுத்துரைத்தவன், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்றெல்லாம் புகழ்கிறது புராணம். அப்பேர்ப்பட்ட முருகன். ஞானத்தையும் யோகத்தையும் தரக்கூடியவன்.
செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். முருகப்பெருமான் பூமிகாரகன். செவ்வாய் பகவானை வழிபடுவதும் முருகப்பெருமானை வழிபடுவதும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை வழிபடுவதும் மிகுந்த பலன்களை தந்தருளக்கூடியது என்கிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானுக்கு விசேஷம். சஷ்டியும் உகந்த திதி. இன்று செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்த அற்புத நாளில், முருகப்பெருமானை தரிசியுங்கள். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

சொந்த வீடு வாங்கும் விருப்பம் தள்ளிப்போகிறதே என்றிருப்பவர்கள், முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

வேண்டிய வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான்.
வேலவனை வேண்டுவோம். வேதனைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிவடிவேலன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x