Published : 19 Sep 2020 02:35 PM
Last Updated : 19 Sep 2020 02:35 PM
உங்களுக்கு என்னென்ன தேவையோ... உங்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ... உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன தேவையோ... அவற்றையெல்லாம் வழங்கி அருள்வார்; வரம் தருவார். வளமுடன் வாழச் செய்வார் ஒப்பிலியப்பன்!
கோயில் நகரம் என்று கும்பகோணத்தைச் சொல்லுவார்கள். கும்பகோணம் முழுக்க கோயில்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்தான். எந்தத் தெருவில் நுழைந்தாலும் அங்கே கோபுரத்தையும் கோயிலையும் பார்க்கலாம். கும்பகோணம் மட்டுமின்றி கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். அற்புதமான ஆலயம்.
இங்கே, இந்தத் தலத்தில் அழகும் அருளும் ததும்ப சாந்நித்தியத்துடன் காட்சி தருகிறார் பெருமாள். இந்தத் தலத்தின் பெருமாளுக்கு ஸ்ரீஒப்பிலியப்பன் என்பதுதான் திருநாமம். ஒப்பிலியப்பன் என்றால் ஒப்பில்லா அப்பன். ஒப்பில்லாத தகப்பனாக, அருள் பொழியும் தந்தையாக, ஆனந்தத்தைத் தரும் ஞானத் தகப்பனாக இங்கே குடிகொண்டிருக்கிறார் பெருமாள்.
ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில்தான் இருக்கிறது திருநாகேஸ்வரம் திருக்கோயில். திருநாகேஸ்வரம் கோயிலுக்கு அருகில்தான் அய்யாவாடி அமைந்துள்ளது. இந்த அய்யாவாடியில்தான் பிரத்தியங்கிரா தேவி கோயில்கொண்டிருக்கிறாள்.
திருநாகேஸ்வரம் கோயிலில் இருந்து ஆடுதுறை செல்லும் வழியில்தான் அமன்குடி எனும் ஊர் இருக்கிறது. இந்த அமன்குடியில்தான் அஷ்டபுஜம் கொண்டு துர்கை கோயில் கொண்டிருக்கிறாள்.
ஆக, கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயில் பெருமாளை தரிசிப்பது ரொம்பவே விசேஷமும் மகத்துவமும் மிக்கது. இங்கே... ஈடு இணையில்லாத நாயகனாக, ஒப்பு உயர்வற்ற இறைவனாக... ஒப்பிலியப்பனாக அருள்பாலிக்கிறார் பெருமாள்.
புராணத்தில், இந்தத் தலத்துக்கு திருவிண்ணகரம் என்று பெயர். 108 திவ்விய தேசங்களில் இந்தத் திருத்தலமும் ஒன்று. கருடாழ்வார் இங்கே தவம் செய்து, பெருமாளின் திவ்விய தரிசனத்தைப் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். அதேபோல், மார்க்கண்டேய மகரிஷி இங்கே பெருமாளை நினைத்து கடும் தவம் புரிந்து, மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்றார் என விவரிக்கிறது.
இவர்கள் மட்டுமா?
காவிரித்தாயும் இந்தத்தலத்தின் பெருமாளை, திருவிண்ணகர் நாயகனை குளிரக்குளிர தரிசித்திருக்கிறாள். அவரின் அருளைப் பெற்றிருக்கிறாள். அதேபோல், தர்மத்துக்கு தலைவியாகத் திகழும் தர்மதேவதையும் விண்ணநகர் நாயகனின் திவ்ய தரிசனத்தைப் பெற்று, பெருமாளின் அருளையும் அடைந்து, இன்றளவும் தர்மத்தைக் காத்து வரும் பணியைச் செய்து வருகிறாள் எனச் சொல்லி போற்றுகிறது ஸ்தல புராணம்.
மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும் தென் திருப்பதிக் கோயில் என்றும் ஆகாசத் திருநகரம் என்றும் திருவிண்ணகர் என்றும் போற்றிக்கொண்டாடுகிறது ஸ்தல புராணம்.
ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீஒப்பிலியப்பனை தரிசித்திருக்கிறீர்களா? ஒப்பில்லா அழகும் அருளும் சாந்நித்தியமும் சக்தியும் கொண்டு கருணையே உருவெனக் கொண்ட ஒப்பிலியப்பனை ஒருமுறையேனும் தரிசியுங்கள். அவருக்கு முன்னே நின்று கண்குளிர அவரை தரிசியுங்கள்.
‘இதைக் கொடு அதைப் பண்ணு’, ‘எனக்கு இதிலிருந்தெல்லாம் விடுதலை வேண்டும், என் வாழ்வில் இவையெல்லாம் நடக்கவேண்டும்’ என்று உங்கள் கோரிக்கைகளையெல்லாம் பட்டியலாக்கி அவர் முன்னே சமர்ப்பிக்கத் தேவையே இல்லை.
நீங்கள் ஒப்பிலியப்பனுக்கு முன்னே நின்றாலே போதும்... உங்களுக்கு என்னென்ன தேவையோ... உங்கள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையோ... உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன தேவையோ... அவற்றையெல்லாம் வழங்கி அருள்வார்; வரம் தருவார். வளமுடன் வாழச் செய்வார் ஒப்பிலியப்பன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT