Last Updated : 19 Sep, 2020 01:10 PM

 

Published : 19 Sep 2020 01:10 PM
Last Updated : 19 Sep 2020 01:10 PM

புரட்டாசி சனிக்கிழமை; ‘கோவிந்த நாமம்’ சொல்லுவோம்! 


புரட்டாசி சனிக்கிழமையில், கோவிந்தா எனும் திருநாமத்தைச் சொல்லுங்கள். நம் வாழ்வுக்கு வழிகாட்டுவார் மகாவிஷ்ணு. இதுவரை இருந்த துன்பங்களில் இருந்தெல்லாம் நம்மை மீட்டெடுத்து அருள்பாலிப்பார்.

புரட்டாசி மாதம் என்பதே மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். புரட்டாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். இந்த மாதத்தில், பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் செல்வதும் அவரை மனதார வழிபடுவதும் விசேஷமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தினமும் வழிபடும் பக்தர்களும் இருக்கிறார்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துவது சிறப்பான பலன்களைத் தந்தருளும். புரட்டாசி மாதத்தில், பெருமாள் கோயிலுக்குள் சென்றாலே புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புரட்டாசி மாதத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லுகிறார்கள்.

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவதற்கும் ஆராதனை செய்வதற்கும் உகந்த மாதம். பெருமாளுக்கு உகந்ததாக துளசி சொல்லப்படுகிறது. எனவே பெருமாள் கோயிலுக்குச் சென்றால், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வணங்குவது மிக மிக அவசியம். மற்ற மாதங்களில் எப்படியோ... புரட்டாசியிலும் மார்கழியிலும் மறக்காமல், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, அவரிடம் நம் வேண்டுதல்களை வைக்கும்போது அதில் குளிர்ந்து மகிழ்ந்து அருளுவாராம் பெருமாள்.
அதேபோல், வீட்டில் உள்ள பெருமாளின் படத்துக்கு, கொஞ்சமேனும் துளசி சார்த்தி வழிபடுவது கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இல்லத்தில் தனம் - தானியம் பெருகும். இல்லத்திலும் உள்ளத்திலும் சுபிட்சம் நிலவும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

முக்கியமாக, பெருமாளின் திவ்விய நாமங்கள் ஏராளம். அவற்றில், ‘கோவிந்தா’ எனும் திருநாமம் மிக மிக சக்தி வாய்ந்தது. புரட்டாசி மாதம் முழுவதுமே நம்மால் எப்போதெல்லாம் முடிகிறதோ... எந்தக் காரியம் செய்தாலோ, எந்தச் செயலைச் செய்யத் தொடங்கினாலோ... ‘கோவிந்தா’ என்று ஒருமுறையாவது அழைத்துவிட்டு, செயலில் இறங்கினால், அந்தச் செயலை வெற்றியாக்கித் தருவார் திருமால். காரியத்தை வீரியமாக்கி ஜெயம் தந்தருள்வார் வேங்கடவன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புரட்டாசி மாதத்தில், ‘கோவிந்தா’ என்று மகாவிஷ்ணுவின் இந்தத் திருநாமத்தைச் சொல்லுங்கள். குறைவில்லாத வாழ்க்கையைத் தந்தருள்வார் கோபாலன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x