Published : 18 Sep 2020 12:11 PM
Last Updated : 18 Sep 2020 12:11 PM
பிரத்தியங்கிரா தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.
மனித வாழ்வில் சக்தி வழிபாடு என்பது மகத்துவமும் மகோன்னதமும் நிறைந்தது. தேவியை உபாஸித்து வந்தால், சர்வ பலத்துடன் மனோபலமும் கிடைக்கப் பெறலாம் என்றும் இல்லத்தின் அனைத்து சுபிட்சமும் நம்மை வந்தடையும் என்பதும் உறுதி என்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்யும் பக்தர்கள்.
சக்தியரில் உக்கிரமான தெய்வம் என்றும் அவர்களை வழிபாடு செய்வது என்பதும் உண்டு. அப்படி உக்கிர தெய்வங்களாகத் திகழ்பவர்கள் துர்கையும் பிரத்தியங்கிரா தேவியும்.
துர்கையை எல்லா சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். கருவறையைச் சுற்றி வரும் போது, கோஷ்டத்தில் துர்கைக்கு சந்நிதி அமைந்திருக்கும். துர்கையை எப்போதும் வழிபடலாம் என்றாலும் ராகுகாலத்தில் துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதேபோல், பிரத்தியங்கிரா தேவியை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களில் வணங்க வேண்டும் என்றும் அப்படி வணங்கும் போது, பிரத்தியங்கிரா தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து அவளை சாந்தப்படுத்தலாம். அதேபோல் செவ்வரளி மாலை சார்த்தி வணங்கி வழிபடலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயங்களும் குறைவு. மற்ற ஆலயங்களிலும் பிரத்தியங்கிரா தேவிக்கு சந்நிதிகளும் அமைந்திருப்பதில்லை. கும்பகோணம் அருகே அய்யாவாடி எனும் ஊரில், பிரத்தியங்கிரா தேவிக்கு அற்புதமான கோயில் அமைந்துள்ளது. தவிர, சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில், பிரத்தியங்கிரா தேவி சுதைச் சிற்பமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்.
ஓம் அபராஜிதயை வித்மஹே ப்ரத்யங்கிராயை தீமஹி
தந்நோ உக்ர ப்ரசோதயத்
ஓம் ப்ரத்யங்கிராயை வித்மஹே ஷத்ருனிஷூதின்யை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
ஓம் அஸ்ய ஷ்ரீ ப்ரத்யக்கிர ஸஹஸ்ரநம மஹா மந்த்ரஸ்ய
பைரவ ரிஷிஹி அனுஷ்டுப் சந்தஹ் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவதா
ஹ்ரீம் பீஜம் ஸ்ரீம் ஷக்திஹி ஸ்வாஹா
கீலகம் வித்யா ஸித்யர்த்த ஜப விநியோகஹ
என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி, பிரத்தியங்கிரா தேவியை வழிபடலாம்.
அதேபோல்,
தேவி ப்ரத்யங்கிரா ஸவ்ய ஷிரஹா ஷஷிஷேகரா
ஸம மாஸா தர்மினிச ஸமஸ்த ஸுரஷே முஷீம்
என்கிற மந்திரத்தையும் சொல்லி, பிரத்தியங்கிரா தேவியை தொடர்ந்து வழிபட்டு வந்தால், துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் நமக்கு விடுதலையை தந்தருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்து, எதிர்ப்புகளை ஒழித்துக்காப்பாள் என்பதும் ஐதீகம்.
பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்தியங்கிரா தேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT