Published : 24 Sep 2015 01:12 PM
Last Updated : 24 Sep 2015 01:12 PM

சித்தர்கள் அறிவோம்: மகான் சடைச்சாமி- ஜடாமுடியில் சிவலிங்கம்

ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுதல், மலர்களைக் கொய்து இறைவனுக்கு அர்ப்பணித்தல், பசுஞ்சாணத்தால் திருக்கோயிலை மெழுகுதல், ஆலயத்திலுள்ள குப்பைக்கூளங்களைக் கூட்டி சுத்தம் செய்தல், இறைவனின் முன் நின்று அவனது நாமத்தைச் செப்புதல், கோயில் மணிகளை அசைத்து ஓலி எழுப்புதல், இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவருதல் ஆகியவை தாசமார்க்கம் என்று திருமூலர் கூறுகின்றார்.

பக்தர்கள் இறைவனுக்குச் செய்யும் இந்தத் தொண்டுகள் புதிதல்ல. நாம் இன்றைக்கு இவற்றைத்தான் செய்து வருகிறோம். இறைவனுக்குத் தாசனாகத் தன்னலமின்றித் தொண்டுகளைச் செய்யும் பக்தர்கள், அடுத்த நிலையான பக்தி யோகத்திற்குள் நுழைகின்றனர்.

கிரியை என்ற சத்புத்திர மார்க்கம்

பக்தர்கள், தம்மைப் புத்திரர் களாகவும், இறைவனைத் தமது தந்தையாகவும், தாயாகவும் நினைத்து வழிபடுதல் கிரியை எனப்படுகிறது.

“பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்

ஆசற்ற நல்தவம் வாய்மை அழுக்கின்மை

நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தல்மற்

றாசற்ற சற்புத் திரமார்க்கம் ஆகுமே.”

இந்தக் கிரியை யோகத்தில் ஒரு பக்தன்,

இறைவனைத் துதிப்பதை மட்டுமே தனது கடமையாகச் செய்கின்றான்.

இறைவனைப் பூசை செய்வது, அவனது புகழைப் பாடுதலும், எப்போதும் அவனைப் போற்றுதலும், குற்றமில்லாத தவத்தைச் செய்தலும், வாய்மையைக் கடைப்பிடித்தலும், பொறாமைக்கு இடம் கொடாமலும், அன்னப் பறவையைப் போன்று தமது உள்ளும் புறமும் சுத்தி செய்து கொள்ளுதலும், குற்றமற்ற நற்செயல்களைச் செய்தலும் சத்புத்திர மார்க்கம் என்று திருமூலர் கூறுகின்றார்.

சிவனடியார்கள், ஆழ்வார்களின் வரலாறுகளை அறிந்தவர்கள் இந்த மார்க்கத்தினைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கிரியை யோகத்தின் மூலம் நமது சித்தம் சுத்தமாகிறது. மனதை நிலைப்படுத்த முடிகிறது. அதனால் ஞானத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஞானிகளும் மகான்களும் கிரியை, சரியை யோகம் போன்ற யோகங்களை முற்பிறவியிலேயே கடந்துவிட்டவர்கள் . அதன் தொடர்ச்சியாக இந்தப் பிறவியில் நேராக ராஜ ஞான யோகத்திற்குள் நுழைந்து பேரின்பத்தை அடைந்தவர்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் தான் சடைச்சாமி என்ற மகான்.

ஞானிகளும் மகான்களும் கிரியை, சரியை யோகம் போன்ற யோகங்களை முற்பிறவியிலேயே கடந்துவிட்டவர்கள் . அதன் தொடர்ச்சியாக இந்தப் பிறவியில் நேராக ராஜ ஞான யோகத்திற்குள் நுழைந்து பேரின்பத்தை அடைந்தவர்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் தான் சடைச்சாமி என்ற மகான்.

பூலோகக் கயிலாயம் திருவொற்றியூர்

பூலோகக் கயிலாயம் என்று ஓரு காலத்தில் அழைக்கப்பட்ட திருவொற்றியூர் ஓர் புண்ணிய பூமி என்பதற்கு இங்கு ஜீவசமாதி அடைந்திருக்கும் மகான்களும் சித்தர்களுமே சாட்சி.

அது மட்டுமன்றி திருவொற்றியூரில் வீற்றிருக்கும் அருள்மிகு தியாகராஜப் பெருமான் அப்பர் சுவாமிகளுக்காக ஆறாம் பவனி நடனம் ஆடியதற்காகவும், மீனவர் வடிவில் 63 நாயன் மார்களுக்குக் காட்சியளித்து அப்பர் சுவாமிகளுக்கு நைவேத்தியப் பிரசாதம் வழங்கியதற்காகவும் பெருமை பெற்ற ஸ்தலமாகும்.

இங்குள்ள அப்பர் சுவாமி திருக்கோயிலில் அப்பர் பூசித்த மிகப் பழமையான சிவாலயம் உள்ளது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஞானி பாம்பன் குமரகுரு சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் என்று பல மகான்களும் தங்கியிருந்து யோக நிஷ்டைகள் செய்த பெருமை வாய்ந்தது இந்த ஆலயம்.

இந்த ஆலயத்தில் யோக நிஷ்டை செய்து ஞானம் பெற்ற சடைச்சாமிகள் இந்த ஆலயத்திற்கு அருகில் ஜீவ சமாதி அடைந்து இன்றும் ஒளிவடிவாக வீற்றிருக்கிறார்.

சடைச் சாமிகள் எப்போதும் தமது தலையிலுள்ள ஜடாமுடியில் ஓர் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டிருப்பாராம். அது மட்டுமன்றி ஒரு நடராஜர் சொரூபத்தை வழிபாடும் செய்வார் என்று கூறப்படுகிறது.

நீண்ட தாடியுடனும் ஜடாமுடியுடனும் எப்போதும் காட்சியளித்ததால் இவர் சடைச்சாமி என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். பல சித்துக்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியுள்ள இவரைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இவர் தாம் சமாதி அடையப் போகும் நாளை முன்னதாகவே அறிவித்து சமாதியைத் தயார் செய்துள்ளார். அவர் அறிவித்தபடி 1886-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் (பார்த்திப ஆண்டு, தை மாதம், வியாழக்கிழமை, பரணி நட்சத்திரம்) சமாதியினுள் அமர்ந்து அதனை மூடச் செய்துள்ளார். சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவரிடம் தீட்சை பெற்றுச் சீடரான நைனா சுவாமிகள் என்ற மகான் பாம்பன் குமரகுரு சுவாமிகளின் குரு என்பது குறிப்பிடத்தக்கது. நைனா சுவாமிகளின் ஜீவசமாதியும் சடைச் சாமியின் ஜீவசமாதியின் அருகிலேயே உள்ளது.

சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க

திருவொற்றியூர் தேரடிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அப்பர் சுவாமிகள் கோயில் தெருவினுள் நுழைந்து புறவழிச் சாலையைக் கடந்தால் வலது பக்கம் இந்த மண்டபம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x