Last Updated : 17 Sep, 2020 08:31 AM

 

Published : 17 Sep 2020 08:31 AM
Last Updated : 17 Sep 2020 08:31 AM

நாலுபேருக்கு தயிர்சாதம் தரலாமா நீங்கள்?

மகாளய பட்ச அமாவாசையை முன்னிட்டு, இன்றைய நாளில், நான்கு பேருக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் மூதாதையர்கள் உங்களின் செயலால் மகிழ்ந்து போவார்கள். உங்களை ஆசீர்வதிப்பார்கள்.

மனித வாழ்வில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது நம்முடைய கடமை. அவர்கள் நம் சந்ததியினர். அவர்களை சிறப்புற வளரச் செய்வதும் வாழச் செய்வது ஒவ்வொருவருடைய தலையாயக் கடமை. ஒருபோதும் இதை விட்டுவிடக்கூடாது. நம் கடமையை செவ்வனே செய்யவேண்டும். அவர்களை, நம் வாரிசுகளை அழகுற உருவாக்கவேண்டும்.

அதேபோல், முந்தைய தலைமுறையினரை ஒருபோதும் மறக்கக்கூடாது. நம் வம்சத்தின் முந்தையவர்களுக்கு நாம் ஆராதனைகள் செய்யவேண்டும். அவர்களை வணங்கவேண்டும். வாழ்வில், எந்தவொரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அங்கே முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டால், வந்த துன்பமும் பனி போல் விலகி விடும். நினைக்காத நல்லவைகள் கூட தேடி வந்து மடியில் விழும்.

இஷ்ட தெய்வ வழிபாட்டை விட, குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வ வழிபாட்டை விட முன்னோர் வழிபாடு முக்கியம். முன்னோர் வழிபாடு செய்யச் செய்ய, பித்ருக்கள் சாபத்தில் இருந்து விடுபடுவோம். பித்ரு தோஷம் இல்லாத நிலை உருவாகும்.

காலையில் சாப்பிட்டுவிட்டு, மதியம் சாப்பிடாமல் இருந்தாலே வயிறு கபகபவென பசிக்கும்தானே. தலை லேசாக கிறுகிறுக்கும் அல்லவா. இரவில் சாப்பிடும் போது, அந்த உணவும் ஏற்க முடியாமல் சுருண்டு கொள்கிறவர்கள் உண்டுதானே. ஆக, மூன்று வேளை உணவு என ஒரு நியமம் வாழ்வில் வைத்துக்கொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் முன்னோர்கள் உலகமும்.

நம் முன்னோர்களும் நாம் உணவிடுவோம் என்று காத்திருப்பார்கள். தாகத்துக்கு தண்ணீரும் பலத்துக்கு எள்ளும் தருவோம் என எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதெல்லாம் தாகத்துக்கு தண்ணீரும் எள்ளும் வழங்கவேண்டும், முன்னோர்களை எந்த தருணங்களிலெல்லாம் ஆராதிக்க வேண்டும், அவர்களுக்கு அர்க்யம் செய்து தர்ப்பணம் செய்யும் நாட்கள் என்னென்ன, பித்ருக்களுக்கு உரிய நாட்கள் எவை என்று விளக்கம் அளித்திருக்கிறது சாஸ்திரம்.

அமாவாசை பித்ருக்களுக்கு முக்கியமான நாள். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ரொம்பவே முக்கியமான நாள். அதிலும் புரட்டாசி மகாளய அமாவாசை உன்னதமான நாள்.

ஆவணி பெளர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்து முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள். நம் வீட்டுக்கு வருகிறார்கள். நாம் செய்யும் வழிபாடுகளையும் ஆராதனைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். புரட்டாசி மகாளய பட்ச அமாவாசையின் போது, நம் வழிபாடுகளையும் தர்ப்பணங்களையும் உணவுகளையும் ஏற்றுக்கொண்டு பித்ரு லோகம் செல்கிறார்கள் என்பதாக ஐதீகம்.

இன்று செப்டம்பர் 17ம் தேதி மகாளய பட்ச அமாவாசை. புரட்டாசி மாதப் பிறப்பும் கூட. இந்த நன்னாளில், முன்னோர் வழிபாடு செய்யுங்கள். முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, உணவுப் படையலிட்டு வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுவித்து அருளுவார்கள் முன்னோர்கள்.
மேலும் முன்னோர்களை வேண்டிக்கொண்டு, அவர்களை மனதில் நினைத்து, இன்றைய நாளில் நான்கு பேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள் முன்னோர்கள்.

வீட்டில் தனம் தானியம் பெருகும். சுபிட்சம் நிலவும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியுண்டாகும். அமைதியும் ஆனந்தமுமாக வாழ்வீர்கள். உங்கள் வம்சம் தழைக்கும். சிறக்கும். செழிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x