Published : 16 Sep 2020 08:15 PM
Last Updated : 16 Sep 2020 08:15 PM
‘பிறருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். அப்போதெல்லாம் உங்களுக்கு உதவி செய்வதற்காக நான் வருவேன்’’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
கலியுகத்தில் கண் கண்ட மகான்கள் எத்தனையோ பேர். அவர்களெல்லாம் மனித குலத்துக்கு நம்பிக்கையையும் வாழ்வியல் முறையையும் போதித்து அருளினார்கள். அவர்களில் முக்கியமான மகான் என்று பலராலும் போற்றப்படுபவர் ஷீர்டி சாயிபாபா.
பகவான் சாயிபாபா, ஷீர்டியில் பக்தர்களை தரிசித்து அருளாசி வழங்கியிருக்கிறார். ஷீர்டி எனும் தலம், புண்ணிய தலமாக இன்றைக்கும் திகழ்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஷீர்டி எனும் திருத்தலத்துக்கு, சாயிபாபாவின் திருப்பாதம் பட்ட பூமிக்கு வந்து, தரிசித்துச் செல்கிறார்கள்.
இதேபோல், எண்ணற்ற ஊர்களில், இந்தியா முழுவதும் பாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஷீர்டியில் இருந்து மண்ணெடுத்து வந்து கோயில் எழுப்பியிருக்கிறார்கள். ஷீர்டி ஆலயத்தில் இருந்து, சிலைகள் வடித்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவிலும் தமிழகத்திலும் பல ஊர்களில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
‘எங்கெல்லாம் என் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ, அங்கே நானிருக்கிறேன்’ என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.
அதேபோல், ‘இந்த உலகில் எல்லோருக்குமே, எவரிடமிருந்தேனும் உதவி தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. யாராவது நமக்கு உதவி செய்யமாட்டார்களா என்று எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே உதவி என்பது பணத்தால் செய்யப்படுகிற உதவி மட்டுமே அல்ல. பொருளால் செய்யப்படுகிற உதவி மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். ஊருக்கு வழி எப்படி என்று யாரோ கேட்பார்கள். அதற்கு அந்த ஊருக்கு வழியைச் சொல்வார்கள். இதுவும் கூட ஒருவகையில் உதவிதானே.
என் பெயரைச் சொல்லும் அன்பர்கள், என்னை நினைத்துக்கொண்டிருக்கிற நண்பர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உதவி என்று யாரேனும் கேட்டால், அவர்களுக்கு என்னுடைய அன்பர்கள், என்னுடைய நண்பர்கள், என் பெயரை எப்போதும் மனதுக்குள் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்... உடனே உங்களால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்யுங்கள். முக்கியமாக உங்களை நம்பி வந்து, உங்களிடம் கேட்பவர்களுக்கு அவசியம் உதவி செய்யுங்கள்.
அப்படி யாரெல்லாம் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறீர்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் ஓடோடி வருவேன். நீங்கள் யாருக்காவது ஒருபைசா உதவி செய்தீர்களென்றால், அவர்களுக்கு உதவி செய்த உங்களுக்கு நூறு பைசாவை வழங்குவதற்காக ஓடி வருவேன்.
மனிதர்களில் பாரபட்சமில்லை. என்னுடைய அன்பர்கள், என் பெயரைக் கூட சொல்லாதவர்கள் என்றெல்லாம் நானும் பாரபட்சம் பார்ப்பவனில்லை. என்னுடைய அன்பர்கள், அப்படிப் பாரபட்சத்துடன் செயல்படுவதையும் நான் அனுமதிப்பதில்லை.
என்னுடைய அன்பர்கள், என்னுடைய பக்தர்கள், ‘சாயிராம்’ என்று என்னை, என் பெயரை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். அப்படி உதவி செய்பவர்கள் இந்த உலகில் எங்கே இருந்தாலும் நான் அவர்களுக்கு ஓடோடி வருவேன்’ என்று அருளியிருக்கிறார் ஷீர்டி சாயிபாபா.
சாயி பக்தர்கள், யாருக்கேனும் உதவிக்கரம் நீட்டினால், அவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவார் சாயிபாபா.
சாயிராம்.... சாயிராம்... சாயிராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT