Published : 16 Sep 2020 12:20 PM
Last Updated : 16 Sep 2020 12:20 PM
குரு வார வியாழக்கிழமையில், புரட்டாசி மாதம் பிறக்கிறது. கீதோபதேசம் தந்தருளிய குருவாகத் திகழும் பெருமாளையும் குரு தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்லுவார்கள். வியாழக்கிழமை என்பது குரு அம்சம் நிறைந்தநாள். குருவின் கிருபையும் அருளுமில்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆனானப்பட்ட பார்வதிதேவி, சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் உடனே நடந்தேறிவிடவில்லை. உமையவளுக்கு குரு யோகம் அமையவில்லை என்பதால் நினைத்தது நடக்காமல் தள்ளிப்போனது. பிறகு சிவனருளை வேண்டி தவமிருந்தாள். குருவின் பார்வையைப் பெற்றாள். திருமணம் இனிதே நடந்தேறியது என்கிறது புராணம்.
ஆவணி மாதம் இன்று நிறைவுறுகிறது. இந்த முறை ஆவணி மாத பெளர்ணமியின் அடுத்தநாளான பிரதமையில் இருந்து மகாளய பட்ச காலம் தொடங்கி, அமாவாசையான நாளைய தினத்துடன் நிறைவுறுகிறது.
மேலும் நாளைய தினம் புரட்டாசி மாதம் தொடங்குகிறது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் புரட்டாசி மாதப் பிறப்பும் அமைந்துள்ளது. அத்துடன் அற்புதமான அமாவாசையும் இணைந்து வருகிறது.
எனவே குரு வார வியாழக்கிழமையில், புரட்டாசி பிறப்பில், மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். அர்ஜூனனுக்கு வழங்குவது போல் மொத்த உலகுக்கும் கீதோபதேசம் அருளினார் கிருஷ்ணாவதாரத்தில். எனவே, இந்தநாளில், குரு வார நன்னாளில், பெருமாளை துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள்.
அதேபோல், ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக சிவபெருமானே இருந்து, கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளினார் என்கிறது சிவபுராணம். எனவே குரு அம்சமாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
குருவே சிவம்; குருவே பெருமாள். குரு வாரத்தில்... அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளும் அதேவேளையில், சிவாலயத்துக்கும் செல்லுங்கள். சிவலிங்கத் திருமேனியையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் செவ்வரளி மாலை சார்த்தி மல்லிகைச் சரம் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.
குரு வாரத்தில், குருவருளும் திருவருளும் கிடைக்கப்பெறலாம். குரு யோகத்துடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT