Published : 16 Sep 2020 11:01 AM
Last Updated : 16 Sep 2020 11:01 AM
மகாளயபட்சத்தின் மிக முக்கியமான நாளான மகாளயபட்ச அமாவாசை எனும் புண்ணியம் நிறைந்ததினத்தில், முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்யுங்கள். மறக்காமல் செய்யுங்கள். இந்த நாளில், தர்ப்பணம் செய்வது மகத்துவம் மிக்கது. மேலும் நம் முன்னோர்களை நினைத்து, காகத்துக்கு உணவிடுங்கள். யாருக்கேனும், குடை அல்லது செருப்பு அல்லது போர்வை வழங்குங்கள். உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பித்ரு முதலான தோஷங்கள் விலகும். பித்ரு சாபம் நீங்கும். முன்னோர்களின் ஆசியுடன் முன்னுக்கு வருவீர்கள். நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை, மகாளய அமாவாசை.
மாதந்தோறும் அமாவாசை வரும். அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சக்தி வாய்ந்தவை. சந்ததி சிறக்கச் செய்யும் நாட்களாக அமைந்திருப்பவை. தை அமாவாசை. அடுத்து ஆடி அமாவாசை. மூன்றாவதாக... புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளில், நாம் செய்யும் பித்ரு வழிபாடானது நம்மை சீரும் சிறப்புமாக வாழவைக்கும். முன்னோர்களின் பரிபூரண ஆசியை நமக்கு வழங்கும்.
12 அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்புக்கு உரியவை. இந்த மூன்றில் இன்னும் அதிர்வுகள் கொண்ட நாளாக அமைந்திருப்பதுதான் மகாளயபட்ச அமாவாசை என்கிற புரட்டாசி அமாவாசை.
புரட்டாசி அமாவாசை மகாளய பட்ச அமாவாசை எனப்படுகிறது மகாளயபட்சம் என்பது இந்த அமாவாசைக்கு முந்தைய நாட்கள். அதாவது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்து பிரதமையில் தொடங்கி அமாவாசை வரை உள்ள நாட்கள். பட்சம் என்றால் பதினைந்து. மகாளயம் பித்ருக்கள், முன்னோர்கள் கூட்டமாக வருவது. ஆகவே மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்களும் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்தில் வருகிறார்கள். நம் வீட்டுக்கு வருகிறார்கள். நாம் செய்யும் ஆராதனைகளையும் தர்ப்பணங்களையும் வழிபாடுகளையும் நேரடியாகவும் சூட்சுமமாகவும் பார்க்கிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதாக ஐதீகம்.
மகாளய பட்ச காலத்தின் நிறைவுநாளே மகாளயபட்ச அமாவாசை. நம் முன்னோர்களை மறக்காமல் வழிபடக்கூடிய நாள். இதுவரை முன்னோர்களை நாம் சரியாகவும் முறையாகவும் வணங்கியிருந்தாலும் வணங்காமல் போனாலும், புரட்டாசி மகாளயபட்ச அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களை வணங்க வேண்டும். வழிபடவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும். அவர்களுக்கு அவர்களின் பெயர்களைச் சொல்லி, மூன்று முறை எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விடவேண்டும். முன்னோரின் படங்களுக்குப் பூக்களிட வேண்டும். அவர்களுக்கு படையலிடவேண்டும்.நம் முன்னோர்களுக்கு வைத்த படையலை காகத்துக்கு வழங்கி வேண்டிக்கொள்ளவேண்டும்.
நம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் நினைவாக, யாருக்கேனும் புடவை வாங்கிக் கொடுக்கலாம். வேஷ்டி வழங்கலாம். குடை வழங்கலாம். போர்வை வழங்கலாம். சால்வை வழங்கலாம். காலணி வாங்கிக் கொடுக்கலாம். ஐந்து பேருக்கேனும் உனவுப் பொட்டலம் வழங்கலாம். இவை எல்லாமே பித்ரு சாபத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். பித்ரு தோஷம் முழுவதுமாக நம்மிலிருந்து விலகிவிடும். பித்ருக்களின் பரிபூரணமாக ஆசியைப் பெறலாம். இதனால் இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் விலகும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். வாழையடி வாழையென வம்சம் தழைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நாளைய தினம் செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை, மகாளய பட்ச அமாவாசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT