Published : 15 Sep 2020 08:36 PM
Last Updated : 15 Sep 2020 08:36 PM
மகாளயபட்ச காலம் நிறைவுறுவதற்கு இன்னும் இரண்டுநாட்கள்தான் இருக்கின்றன. இதுவரை இல்லாவிட்டாலும் இந்த இரண்டுநாளிலேனும் உங்கள் முன்னோரை வழிபடுங்கள். அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
வருடம் முழுவதும் மட்டுமின்றி இந்த ஜென்மம் முழுவதும் வணங்குவதற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் நம் முன்னோர்கள். நம் முன்னோர்களில்லாமல், நாம் இந்தப் பூவுலகிற்கு வந்துவிடவில்லை. அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி என்று மூன்று தலைமுறை முன்னோர்களையேனும் வணங்கி வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஒருவருக்கு இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியம். அதேபோல், ஒரு குடும்பத்துக்கு குலதெய்வ வழிபாடு முக்கியம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, நம் வம்சத்தையே காத்தருளும், வாழையடி வாழையென தழைக்கச் செய்யும் முன்னோர் வழிபாடு மிக மிக அவசியம் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முன்னோர் வழிபாட்டை குறைவின்றி எந்த வீட்டில் செய்யப்படுகிறதோ, யாரெல்லாம் செய்கிறார்களோ அந்த வீட்டில் கஷ்டமோ நஷ்டமோ இதுவரை இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கிவிடும். தடைகளில் தத்தளித்தவர்கள், காரியத்தில் வெற்றி காணத் தொடங்கிவிடுவார்கள்.
ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணம் உண்டு என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. சாஸ்திரம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது. மாதந்தோறும் அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலம், சிராத்தம் என தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
இதில் ஆவணி பெளர்ணமிக்கு மறுநாளில் இருந்து வருகிற பிரதமை மகாளய பட்ச தொடக்கநாள். அதில் இருந்து அமாவாசை வரை மகாளயபட்ச காலம். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டுக்கான நாட்கள்.
இந்த நாட்களில், தினமும் தர்ப்பணம் செய்யவேண்டும். காகத்துக்கு உணவிட வேண்டும். முன்னோர் படங்களுக்கு நமஸ்கரிக்க வேண்டும். முன்னோரை நினைத்து யாருக்காவது உடை, குடை, போர்வை, புடவை, வேஷ்டி, போர்வை, செருப்பு, சால்வை என வழங்க வேண்டும். அதேபோல், நம்மால் முடிந்த அளவுக்கு நான்கு பேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்கவேண்டும். இதை இந்த காலத்தில் செய்தால், முன்னோர் குளிர்ந்து போவார்கள். நம்மை ஆசீர்வதிப்பார்கள்.
அதுமட்டுமின்றி, எந்தத் தலைமுறைக்கு முன்னரோ ஏற்பட்ட பித்ரு சாபமோ பித்ரு தோஷமோ நீங்கிவிடும் என விளக்கியுள்ளனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம்...
மற்ற தருணங்களில், நாம் நம் முன்னோர்களுக்கு மட்டுமே தர்ப்பணம் உள்ளிட்டவற்றைச் செய்யவேண்டும். ஆனால் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் நாம், அதாவது பெற்றோர் இல்லாதவர்கள், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பன், நண்பனின் பெற்றோர், பெரியப்பா, சித்தப்பாக்கள், மாமன்கள், சித்தி, வாரிசே இல்லாதவர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், நமக்குப் பிடித்த தலைவர்கள், கலைஞர்கள், நாம் வீட்டில் ஆசையாக வளர்த்த நாய், மீன், கிளி என எந்த உயிர் இறந்திருந்தாலும் அந்த ஆத்மாக்களுக்காக தர்ப்பணம் செய்யலாம். வழிபடலாம். பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
வருடத்துக்கு மகாளய பட்ச காலம் என்பதில், யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம், வழிபடலாம் என்பது இந்த பதினைந்து நாட்கள்தான். மகாளயபட்ச காலத்தில் நாளை புதன்கிழமை 16ம் தேதி, நாளை மறுதினம் வியாழக்கிழமை 17ம் தேதி என இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
ஆகவே, இதுவரை முன்னோர் வழிபாடு, இறந்தவர்களுக்கான வழிபாடு செய்யாவிட்டாலும் இந்த இரண்டுநாளும் செய்துவிடுங்கள். அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உடையோ போர்வையோ தானமாகக் கொடுங்கள். செருப்பு வாங்கிக் கொடுங்கள். குடை வாங்கிக் கொடுங்கள். நீங்கள் உங்கள் குடும்பமும் சிறப்புற வாழ்வீர்கள். உங்கள் வம்சம் வாழையடி வாழையென செழித்து வளரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT