Published : 14 Sep 2020 11:05 AM
Last Updated : 14 Sep 2020 11:05 AM
துவாதசியில் முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். முன்னோர்களின் ஆசியையும் அருளையும் பெறுங்கள்.
துவாதசி திதி என்பது முக்கியமான நாள். ஏகாதசியும் துவாதசியும் மகாவிஷ்ணுவுக்கு உகந்தநாட்கள். இந்தநாட்களில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் பலனுள்ளது. பலமும் வளமும் தருவது.
அதனால்தான் ஏகாதசியில் விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். ஏகாதசி என்பது வைகுண்ட ஏகாதசி மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. ஏகாதசியன்று விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள் பலரும்.
ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி. ஏகாதசியைப் போலவே துவாதசியும் மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாள். ஏகாதசியில் விரதமிருந்து துவாதசியில் விரதத்தை நிறைவு செய்து அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தால் புண்ணியங்கள் கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். கவலைகள் மறையும்.
இதேபோல், துவாதசி என்பது முன்னோர்களுக்கு உரிய நாளும் கூட. முன்னோர்களை வணங்கி வழிபடுவதற்கு உண்டான அற்புதமான நாளும் கூட.
அதிலும் மகாளயபட்ச காலத்தில் வரக்கூடிய துவாதசி இன்னும் சிறப்பு வாய்ந்தது. மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான பதினைந்து நாட்கள். பட்சம் என்றால் பதினைந்து. பட்ச காலம் என்றால் பதினைந்து நாட்கள். மகாளயம் என்றால் கூட்டமாக... ஒன்றிணைந்து என்று அர்த்தம். முன்னோர்கள் கூட்டமாக நம் பூலோகத்துக்கு வரும் நாள். நம் வீட்டுக்கு வரும் நாள்.
இந்த காலகட்டங்களில், முன்னோர்கள் சூட்சுமமாக நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்கிறது சாஸ்திரம். மகாளய பட்ச காலத்தில், பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாடு செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். பித்ரு தோஷத்தில் இருந்தும் பித்ரு சாபத்தில் இருந்தும் விடுபடச் செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பதினைந்து நாட்களும் தர்ப்பணம் உள்ளிட்டவற்றைச் செய்ய இயலாதவர்கள், முக்கியமான நாட்களிலேனும் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் ஆச்சார்யர்கள்.
இன்று 14ம் தேதி துவாதசி. இந்தநாளில், பெருமாளையும் முன்னோர்களையும் வழிபடுங்கள். துளசி மாலை சார்த்தி வணங்குங்கள். ஏதேனும் உணவு சமைத்து படையலிடுங்கள். காகத்துக்கு வழங்குங்கள். எவருக்கேனும் ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பித்ருக்களின் பாவங்கள் நிவர்த்தியாகும். அவர்களை சொர்க்கலோகத்துக்கு அழைத்துக் கொள்வார் மகாவிஷ்ணு.
நாமும் முன்னோர்களின் பரிபூரண ஆசியைப் பெற்று சகல செளபாக்கியங்களுடன் வாழலாம். கஷ்டங்களும் கடன் தொல்லையும் நீங்கப் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT