Published : 11 Sep 2020 09:59 AM
Last Updated : 11 Sep 2020 09:59 AM
நம்முடைய செயலும் சிந்தனையும் சரியாக இருந்துவிட்டால், நம்மை எப்போதும் காப்பார் சாயிபாபா. எத்தனை பெரிய துன்பங்களில் நாம் உழன்று தவித்தாலும் நம்மை கரையேற்றி, கைதூக்கிக் காத்தருள்வார் ஷீர்டி பாபா.
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். அந்த எண்ணம்தான் நம்முடைய செயலையே தீர்மானிக்கிறது. எண்ணமும் செயலும் மனித வாழ்வின் இரண்டுகண்கள். இதில் தவறோ குறைவோ அதர்மமோ இருந்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் நரகம்தான் என்கிறது சாஸ்திரம்.
இதைத்தான் தன் பக்தர்களுக்கு உபதேசித்து அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா. "நீ என்ன செய்தாலும் அதை நான் அறிவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்!" என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.
நாம் செய்கிற எல்லாக் காரியங்களையும் கண் வைத்துக்கொண்டிருக்கிறார் பாபா. பாபாவுக்குத் தெரியாமல் ஒரு நல்லதையோ கெட்டதையோ நாம் செய்யவே முடியாது. சகல மனிதர்களின் செயல்களையும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாபா.
ஒரு துரும்பை நாம் இங்கிருந்து அந்தப் பக்கமாக வைத்தாலும் கூட அதை பாபா அறிவார். முக்காலமும் உணர்ந்த ஒப்பற்ற பாபாவின் பார்வையில் இருந்து ஒருவரும் தப்பவே முடியாது என்கிறார்கள் பக்தர்கள்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து புரிந்து தெளிந்து செயல்படத் தொடங்கிவிட்டால், நல்லதை மட்டுமே செய்ய ஆரம்பிப்போம். தீய எண்ணங்களுக்கோ பிறர் பொருட்களை அபகரிப்பதற்கோ பிறன்மனை விழைவதற்கோ அடுத்தவரைக் குழி பறிப்பதற்கோ ஒருபோதும் செயல்படமாட்டோம். தீய விஷயங்களுக்குள் போகாமல், வேறு திசையில் பயணிக்க ஆரம்பிப்போம்.
நம்முடைய செயலிலும் சொல்லிலும் நல்லவை வந்துவிட்டால், நம்முடைய துன்பங்களையும் வேதனைகளையும் பாபா பார்த்துக்கொள்வார். நமக்கு என்ன வேண்டும் என்பது பாபாவுக்குத் தெரியும். எப்போது கொடுக்கவேண்டும் என்பதையும் பாபாவே தீர்மானித்து வைத்திருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.
அனைத்தையும் பாபா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து செயல்பட்டு வந்தால், அமைதியான வாழ்வையும் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியான வாழ்வையும் நமக்குத் தந்தருள்வார் பாபா.
புரிந்துகொள்ளுங்கள்... பாபா நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார்!
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT