Published : 10 Sep 2020 07:59 PM
Last Updated : 10 Sep 2020 07:59 PM
ஆவணி வெள்ளிக்கிழமையில், ராகுகால வேளையில், துர்கையின் சந்நிதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். நம் துக்கத்தையெல்லாம் போக்குவாள். துயரங்களையெல்லாம் நீக்கியருள்வாள்.
துக்கங்களையெல்லாம் போக்கக்கூடியவள் துர்காதேவி. சக்தியின் பல வடிவங்களில் துர்கையும் ஒருத்தி. அதனால்தான், துர்காதேவி எல்லாக் கோயில்களிலும் வீற்றிருக்கிறாள். சக்தியில்லையேல் சிவமில்லை என்றொரு வாசகம் உண்டு. அதனால்தான் சிவாலயங்களில், கோஷ்டத்திலேயே சிவனாரைச் சுற்றியுள்ள கோஷ்டப் பகுதியிலேயே கொலுவிருந்து அருள்பாலிக்கிறாள் தேவி.
எவருடைய கஷ்டங்களையும் பொறுக்காதவள் துர்கை. தேவர்களின் துயரங்களைப் போக்கவும் அசுரர்களின் கொட்டத்தை அடக்கவும் பிறப்பெடுத்தவள். முனிவர் பெருமக்களின் தவத்தைக் கலைத்த அசுரக் கூட்டத்தைக் கண்டு பொசுக்கித் தள்ளியவள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கு ஒரு கஷ்டமென்றால் ஒருபோதும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டாள். துடித்தெழுவாள். துயர் துடைப்பாள்.பெண்களின் கண்ணீரை மட்டுமின்றி, அந்தப் பெண்ணின் குடும்பத்து மொத்த சோகங்களையும் வேரோடு அழித்துவிடுவாள். ஆனந்தத்தைக் குடியிருக்கச் செய்வாள் என்றெல்லாம் போற்றுகிறார்கள் பெண்கள்.
ராகுகாலத்தில், துர்கையின் ஆட்சியே பலம் பெறுகிறது. ராகு என்பது சாயா கிரகம். பாம்பு கிரகம். ராகு கேதுவின் தாக்கம், சனியின் தாக்கத்தை விட, குருவின் பெயர்ச்சியை விட மிக மிக முக்கியமானது. கடந்த செப்டம்பர் 1ம் தேதிதான் ராகு - கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு - கேது பெயர்ச்சியால், செல்வாக்கும் சொல்வாக்கும் இழந்துவிடுமோ என்று அச்சப்பட்டிருப்பவர்கள், ராகு தோஷத்தாலும் கேதுவின் ஆதிக்கத்தாலும் பீடிக்கப்பட்டிருப்பவர்கள், ராகுகால வேளையில், துர்கையை சரணடைந்தால் போதும்... நம்மை ராகு கேது முதலான தோஷங்களில் இருந்து காத்தருள்வாள் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள்.
ஒவ்வொரு நாளும் ராகுகாலம் ஒன்றரை மணி நேரம் வரும் என்றாலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் வரும் ராகுகாலம் மிகவும் முக்கியமானது. செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30. வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எனவே, நாளைய தினம் வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று, அம்மனை வழிபடுங்கள். சிவாலயங்களுக்குச் சென்று அம்பாளைத் தரிசியுங்கள். கோஷ்டத்தில் துர்கையின் சந்நிதியில், எலுமிச்சை தீபமேற்றுங்கள். செவ்வரளி மற்றும் செந்நிற மலர்கள் சார்த்துங்கள். மனதார வழிபடுங்கள். உங்கள் வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் துர்கையிடம் சொல்லி முறையிடுங்கள்.
தடைப்பட்ட திருமணத்தை நடத்திக் கொடுப்பாள். மாங்கல்ய பலம் தருவாள். திருமணமாகிவிட்ட பெண்களின் மாங்கல்ய பலம் காப்பாள். வீட்டில் துஷ்ட சக்திகள் அண்டாமல் அரவணைத்துக் காத்தருள்வாள் துர்காதேவி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT