Published : 09 Sep 2020 09:10 PM
Last Updated : 09 Sep 2020 09:10 PM
முன்னோர்களும் குருவுக்கு சமமானவர்கள்தான். எனவே குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், நம்முடைய முன்னோர்களை குரு ஸ்தானத்தில் மனதில் வைத்து வழிபடுங்கள். பித்ரு தோஷம் மற்றும் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவீர்கள்.
ஒரு வருடத்தில் எந்த காலங்களில் நாம் முன்னோரை வணங்குகிறோமோ இல்லையோ... மகாளயபட்ச புண்ணிய காலத்தில், மறக்காமல் நம்முடைய பரம்பரையின் முன்னோர்களை வழிபடவேண்டும் என்று விளக்கியுள்ளது சாஸ்திரம்.
மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்துக்கு நான்காம் இடத்தைத் தந்திருக்கிறார்கள் மூதாதையர்கள். நம்முடைய மாதாவே முதல் தெய்வம். பிதா எனப்படும் தந்தையே இரண்டாவது தெய்வம். தாயாரால்தான் இந்த பூமிக்கு வருகிறோம். தந்தையின் துணையுடனே பூமிக்கு வருகிறோம். ஆகவே, தாயும் தந்தையுமே முதல் குரு, ஆசான், வழிகாட்டி எல்லாமே!
தாயும் தந்தையும் மட்டுமின்றி நம்முடைய முன்னோர்கள், அதாவது தாய் வழி முன்னோர்கள், தந்தை வழி முன்னோர்கள் எல்லோருமே நமக்கு குருவுக்கு சமானமானவர்கள். அதனால்தான், தர்ப்பணத்தின் போதும் சிராத்தத்தின் போதும் திவசத்தின் போதும்... முன்னோர் வழிபாட்டின் போதும், தந்தையின் பெயர், தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியோரின் பெயர்கள், அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்றும் அவர்களின் பெயர்களையெல்லாம் சொல்லி எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் வழிநடத்தி அறிவுறுத்தியிருக்கிறது.
பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான பதினைந்துநாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமான நாள்; முன்னோர்களுக்கான நாள்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என்பது மிக முக்கியமான அமாவாசைகள். இந்தநாட்களில், முன்னோர் தர்ப்பணம் உள்ளிட்ட பித்ரு ஆராதனைகளை செய்யாவிட்டால், பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பித்ரு தோஷத்துக்கு ஆளாவோம் எனச் சொல்கிறது சாஸ்திரம். புரட்டாசி அமாவாசை என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள், அதாவது பெளர்ணமியில் இருந்து வருகிற அடுத்த 15 நாட்கள், முன்னோர்களுக்கான நாட்கள்.
இந்த பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்துக்கு, நம் வீட்டுக்கு முன்னோர்கள் வருகிறார்கள். நம் ஆராதனைகளைப் பார்த்து மகிழ்கிறார்கள். மகிழ்ந்து ஆசி வழங்குகிறார்கள் என்பதாக ஐதீகம்.
மகாளயபட்ச காலம் என்பது கடந்த செப்டம்பர் 2ம் தேதியில் இருந்து தொடங்கியது. நாளைய தினம் 10ம் தேதி வியாழக்கிழமை. குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். ஆகவே நாளைய வியாழக்கிழமையில், முன்னோர்களை குருவாக பாவித்து வேண்டுங்கள்.
உங்கள் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், குருவுக்கு குருவாக வாழ்வில் நினைத்தவர்கள் என எவரேனும் இறந்திருந்தால், அவர்களையும் முன்னோர்களுடன் சேர்த்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
குருவின் பலமும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துடித்த துயரத்துக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT