Last Updated : 09 Sep, 2020 08:17 PM

 

Published : 09 Sep 2020 08:17 PM
Last Updated : 09 Sep 2020 08:17 PM

தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு; பயம் போக்கும்; தடைகள் நீக்கும்; உயர்வைக் கொடுக்கும்

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவோம். பைரவரை வணங்கி வழிபட்டால், பயத்தைப் போக்கும். காரியத்தடைகளை நீக்கும். வாழ்வில் உயர்வைக் கொடுக்கும்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும். சிவ சந்நிதியில் இருந்து கோஷ்டத்தை பிராகாரமாக வலம் வரும் போது, பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும்.

அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாள். தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிக மிக உன்னதமான நாள். இந்தநாளில், பைரவரை மனதார வழிபடுவதும் அவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வதும் மகோன்னதமான பலன்களைத் தரும்.

சில ஆலயங்களில், தேய்பிறை அஷ்டமி நாளில், ராகுகாலவேளையில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் வடைமாலை சார்த்தியும் வேண்டிக்கொள்வார்கள். அதேபோல் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்வதும் வழக்கு முதலான பிரச்சினைகளில் இருந்து நல்ல தீர்வைக்கொடுக்கும் என்பார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை வியாழக்கிழமை, 10ம் தேதி தேய்பிறை அஷ்டமி. இந்த நன்னாளில், பைரவரை தரிசனம் செய்யுங்கள். நீண்டகாலம் கழித்து, ஆலயத்துக்கு, அஷ்டமியில் சென்று பைரவ வழிபாடு செய்யும் தருணம் வந்திருக்கிறது.

எனவே, மறக்காமல், பைரவர் வழிபாடு செய்யுங்கள். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கெளரவத்தையும் பதவியையும் பொன்னையும் பொருளையும் இழந்துவிட்டோமே என்று கலங்கித் தவிப்பவர்கள் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். இழந்த வேலையையும் பதவியையும் கெளரவத்தையும் புகழையும் பொன் பொருளையும் மீண்டும் பெறுவீர்கள்.

இதுவரை வீட்டில் இழந்த நிம்மதியை திரும்பப் பெறுவீர்கள். எதிரிகளின் கொட்டம் ஒழியும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

பைரவரில் சொர்ணாகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷமானவர். இவரை, தேய்பிறை அஷ்டமி நன்னாளில் வணங்கித் தொழுவதும் பைரவரை நினைத்துக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் தோஷங்களையெல்லாம் விலக்கும். தீயசக்திகள் அண்டாமல் காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x