Published : 09 Sep 2020 09:54 AM
Last Updated : 09 Sep 2020 09:54 AM
பகவான் சாயிபாபாவுக்கு பட்டாடைகளும் கிரீடமும் பழங்களும் தருகிறோம். ஆனால் இதையெல்லாம் நம்மிடம் இருந்து பாபா ஒருபோதும் எதிர்பார்ப்பதே இல்லை. வறியவர்க்கு ஆடை வாங்கிக் கொடுத்தால் பாபா நம்முடன் இருப்பார். எவருக்கேனும் வெயிலுக்கு இதம் தரும் குடை வாங்கிக் கொடு. உன்னையே அரணெனக் காப்பார். பசியுடன் இருப்பவர்களுக்கு ஒரு கவளமாவது அன்னமிடு. அங்கே, நீ இருக்கும் இடம் எதுவோ உன்னைத் தேடி பாபாவே வருவார்.
பகவான் சாயிபாபா அப்படித்தான் சொல்லுகிறார்.
’’சில நாட்களாக உன்னை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். பாசம் பாசம் என ஏங்கி அந்த மாயையில் சிக்கி உருக்குலைந்து போகிறாய். உண்மையான பாசத்திற்காக நீ ஏங்கும் ஏக்கத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொய்யான மாயை நிறைந்த உலகம் என்பதை முதலில் புரிந்து உணர்ந்துகொள். ஆனால் நீ திரும்பத் திரும்ப அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டு வெளியேறத் தெரியாமல் தவிக்கிறாய்’’ என்கிறார் சாயிபாபா.
’’இப்போது உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். உன் நலனை விரும்பும் அனைத்து உறவுகளாகவும் நானிருக்கிறேன். தாயாக, தந்தையாக, சகோதரனாக, குருவாக, உற்ற தோழனாக நான் இருக்கிறேன்.
நீ ஏன் இன்னொருவரின் பாசத்திற்காக ஏங்க வேண்டும். எல்லோரிடமும் பாசமும் பிரியமுமாக இருப்பதுதான் உன்னுடைய வேலை. உனக்குள் இருக்கும் எனக்காக ஏங்கு. நீ ஏக்கத்துடன் இருக்கும் போதே, நான் உன்னருகில் வந்து விடுவேன். உன்னை விரும்புகிற நிரந்தர உறவு நான்’’ என்கிறார் சாயிபாபா.
‘’ நீ உயிராக நினைக்கும் இந்த சாயி உன்னுடனேயே இருக்கிறேன். உன்னை விட்டு எங்கும் விலகிப் போக மாட்டேன். உன் எல்லா காரியங்களிலும் நான் உன்னுடனே இருந்து, அதை வெற்றியாக்கிக் கொடுப்பேன். அதுதான் என்னுடைய தலையாய வேலை.
எதற்கும் கலங்காமல் இரு. துவளாமல் இரு. உன் செயல்களில் பூரணமாக கவனம் செலுத்தும் போதெல்லாம் அங்கே உன்னுடன் நானிருக்கிறேன். எனக்கு விருப்பமானவனாக இருப்பதற்கு ஒரேயொரு விஷயத்தை நீ செய்தால் போதும். எல்லோருக்கும் அன்பு காட்டு. எல்லோரிடமும் பரிவுடன் இரு. முடிகிற உதவிகளையெல்லாம் சாரீரத்தாலும் பொருளாலும் செய்துகொண்டே இரு. இப்படியெல்லாம் யார் செய்கிறார்களோ, அவர்களின் பக்கத்திலேயே நானிருக்கிறேன்’’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
எல்லோரிடமும் இருக்கிறார் சாயிபாபா. எல்லோரிடம் நாம் காட்டுகிற அன்பும் எல்லோருக்கும் நம்மால் முடிந்த அளவு செய்கிற உதவியும் பாபாவுக்குப் போய்ச்சேரும். ஆகவே பாபா உங்களிடம் நெருங்க வேண்டுமெனில், எல்லோரிடமும் இணக்கமாகவும் பிரியத்துடனும் இருங்கள். பாபா உங்களைத் தேடி வருவார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT