Last Updated : 08 Sep, 2020 10:56 AM

 

Published : 08 Sep 2020 10:56 AM
Last Updated : 08 Sep 2020 10:56 AM

ஆவணி செவ்வாய்... ராகுகாலம்... துர்கை; கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீப வழிபாடு

ஆவணி மாத செவ்வாய்க்கிழமையில் ராகுகாலவேளையில் துர்கையை வழிபடுங்கள். நீண்டகாலம் கழித்து ஆலயங்களுக்குச் சென்று துர்கைக்கு எலுமிச்சை தீப வழிபாடு செய்யுங்கள். இன்னல்களையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.

செவ்வாயும் வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாட்டுக்கு உகந்தநாட்கள். செவ்வாய்க்கிழமையில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களும் பக்தர்களும் ஏராளம்.

அதேபோல், வெள்ளிக்கிழமையன்றும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு பூக்கள் வழங்கி வேண்டிக்கொள்வார்கள்.செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சக்தி மிகுந்த, நல்ல அதிர்வுகள் கொண்ட நாட்கள். பெண் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாட்கள். அதனால்தான் அம்மன் கோயில்களில், அம்பிகை குடிகொண்டிருக்கும் கோயில்களில் இந்த நாட்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. பொதுவாகவே இந்த சமயத்தில் கோயில் நடை திறந்திருக்கும். ஆகவே இந்த சமயத்தில் துர்கையின் சந்நிதியில் எலுமிச்சையால் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். இதேபோல, செவ்வாய்க்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 வரை. மதியம், உச்சிகால பூஜைக்குப் பிறகு கோயில் நடை சார்த்தப்பட்டாலும் செவ்வாய்க்கிழமைகளில், பக்தர்கள் துர்கையின் சந்நிதியில் விளக்கேற்றுவதற்காகவே அப்போது நடை திறந்திருக்கும்.

சமீப காலங்களில், ராகுகாலவேளையில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்கையை நினைத்து, அம்பிகையை மனதில் நினைத்து, வீட்டிலேயே அந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டு வந்தார்கள்.

இப்போது கடந்த 1ம் தேதி முதல் கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட மாதங்களுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில், செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரையுள்ள ராகுகாலத்தில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று எலுமிச்சை தீபமேற்றி துர்கையை மனதார தரிசனம் செய்யுங்கள். ஆத்மார்த்தமாக உங்கள் குறைகளை அவளிடம் சொல்லி, முறையிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களின் இன்னல்களையெல்லாம் போக்குவாள் துர்கை. இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கச் செய்வாள் தேவி. வீட்டில்... தனம் - தானிய - லாபத்தையும் மகிழ்ச்சியையும் தந்தருள்வாள் அம்பிகை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x