Published : 08 Sep 2020 10:23 AM
Last Updated : 08 Sep 2020 10:23 AM
மகாளய பட்ச செவ்வாய்க்கிழமையில், நம் குடும்பத்தில் இறந்துவிட்ட பெண்களை வழிபடுங்கள். நம் வீட்டு எல்லை தெய்வமாக இருந்து நம்மைக் காப்பார்கள்.
ஒருவருடைய வாழ்வில் இஷ்ட தெய்வம் என்று சில தெய்வங்களை வணங்குவார்கள். இஷ்ட தெய்வம் என்று வணங்கினாலும் குலதெய்வ வழிபாட்டைச் செய்வார்கள். செய்யவேண்டும். ஒரு குடும்பத்துக்கு, குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். குலதெய்வ வழிபாட்டைச் செய்யாமல் இருக்கவே கூடாது. குலதெய்வத்தை வணங்காமல் இருக்கக் கூடாது.
சொல்லப்போனால், நம் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவேண்டும். குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்கள் அனைவருமாகச் சேர்ந்து, குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
வீட்டில் ஏதேனும் சுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னதாக, குலதெய்வ வழிபாடு, குலதெய்வப் படையல் என்று தரிசித்து பிரார்த்தனை செய்வது மிக மிக அவசியம்.
குலதெய்வ வழிபாட்டைவிட, இஷ்ட தெய்வ பிரார்த்தனையை விட, முன்னோர் வழிபாடு என்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது சாஸ்திரம். நம் முன்னோர்களில் பலரை நாம் பார்த்துக் கூட இருக்கமாட்டோம். சிலர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்னும் சிலரைப் பற்றி எதுவும் தெரியாமலே கூட இருக்கும் நமக்கு.
நம் முன்னோர்களில் பலரும் இயற்கையாகவே இறந்திருக்கலாம். நோய் தாக்கி மரணம் சம்பவித்திருக்கலாம். வாழ்வில் துரோகம் தாக்கியோ வறுமை காரணமாகவோ உண்மையான அன்பு கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தியோ தற்கொலைகள் செய்துகொண்டு இறந்திருக்கலாம். ஏதேனும் பூச்சிப்பொட்டு கடித்து, விஷமேறியோ, விபத்திலோ மரணம் சம்பவித்திருக்கக் கூடும்.
நம் முன்னோர்கள் இல்லாமல், நாம் இல்லை. நாம் இந்த பூமிக்கு வருவதற்கு நம் முன்னோர்களின் பாவ புண்ணிய பலன்களே காரணம். நாம் எந்தப் பிறவியிலோ செய்த பலன்களே நாம் இந்தப் பிறப்பை, இப்படியொரு பிறப்பை எடுப்பதற்குக் காரணமாக அமைகிறது என விவரித்துள்ளது சாஸ்திரம்.
ஆகவே முன்னோர் வழிபாடு என்பது மிக மிக அவசியம். நம் முன்னோர்களை முக்கியமான காலங்களிலெல்லாம் வணங்கி, ஆராதித்து, பிரார்த்தனை செய்யவேண்டும். அமாவாசை முதலான நாட்களில் முன்னோருக்கு படையலிடுவது இன்றைக்கும் கிராமங்களில் தொன்றுதொட்டு நடந்துகொண்டிருக்கிறது.
அதேபோல், போதுவாகவே ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமைகளில், நம் வம்சத்தில் எப்போதோ இறந்துவிட்ட பெண்களை நினைத்து வழிபடுவார்கள். குறிப்பாக மகாளயபட்சம் எனும் முன்னோருக்கான பதினைந்து நாட்களில், இறந்துவிட்ட பெண்களை வழிபடுவார்கள். அவர்களுக்கு உணவுகளிட்டு படையலிடுவார்கள். புடவை, ஜாக்கெட், பூ, பழமெல்லாம் வைத்து வேண்டிக்கொள்வார்கள். அந்தப் புடவையையும் ஜாக்கெட்டையும் யாரேனும் வயது முதிர்ந்த பெண்களுக்கு, குறிப்பாக சுமங்கலிகளுக்கு வழங்கி நமஸ்காரம் செய்து ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
கடந்த செப்டம்பர் 2ம் தேதியில் இருந்து தொடங்கியுள்ளது மகாளய பட்ச புண்ணிய காலம். இந்த புண்ய காலத்தில், செவ்வாய்க்கிழமையில், இறந்துவிட்ட பெண்களை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். குடும்ப சகிதமாக உணவுப் படையல் வைத்து நமஸ்கரியுங்கள்.
நம் விட்டின் எல்லை தெய்வமாக இருந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருள்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT